மறைந்தார் படைப்பாளி சூரியதீபன் (பா.செயப்பிரகாசம்)


மிகச்சிறந்த படைப்பிலக்கிய ஆளுமையும், மார்க்சிய லெனினியரும், தமிழ்த் தேசிய உணர்வாளருமானபா. செயப்பிரகாசம் அவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை  (23.10.2022) மாலை தூத்துக்குடி மாவட்டத் தில் அமைந்துள்ள விளாத்திக்குளத்தில் மாரடைப்பால் காலமானார்.

விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்காவும் இடையிலான சமாதான கால கட்டத்தில் 2002 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக்கழகம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடத்திய மானுடத்தின் தமிழ்க்கூடலில் பங்கேற்றார். இந்நிகழ்வை விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை அவர்கள் தலைமை தாங்கியிருந்தார். 

மாநாட்டிற்கு பலருடைய வருகையும் அவர்களுக்கு முக்கியமாகப் பட்டது. சிங்களப் பகுதியில் ஈழத் தமிழர்களின் போராட்டம் பற்றிய நியாயமான உணர்வு பங்களிப்பு ஏற்பட வேண்டுமென்பதற்காக, இலங்கையிலிருந்து செய்தியாளர்கள், அறிஞர்கள், இலக்கிய வாதிகள் எனப் பலரையும் அழைத்திருந்தனர். தமிழகத்தின் ஐவர் அழைக்கப்பட்டனர்.

இந்த ஒன்றுகூடல் நிகழ்வில் பங்கேற்க வந்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் எழுத்தாளர் பா. செயப்பிரகாசம், திரைப்பட இயக்குநர் புகழேந்தி, ஓவியர் மருது, கவிஞர் இன்குலாப் ஆகியோரும் வந்திருந்தனர் என்பது நினைவூட்டத்தக்கது.

விடுதலைப் புலிகளின் அழைப்பில் வன்னிக்குச் சென்று திரும்பினார். தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரனை சந்தித்து உரையாடினார் பா.செயப்பிரகாசம்.  அவருக்கு சூரியத்தீபன் என்ற பெயரை சூட்டினார் தமிழீழத் தேசியத் தலைவர்கள் அவர்கள்.

சந்திப்பு தொடர்பில் பின் அவர் குறிப்பிடுகையில்:

போராளிகளோ, மக்களோ ஆயுதச் சுவாசம் செய்யவில்லை. அமைதி வழியில் தீர்வு காணவே விரும்புகிறார்கள். எதிரி அமைதி வழியில் நம்பிக்கை இல்லாதவன்.

"எமது மக்களின் தேசியப் பரிசீலனைக்குச் சமாதான வழியில் தீர்வு காண நாம் முழு மனதுடனும், நேர்மையுடனும் செயற்பட்டபோதும், பேச்சுக்கள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன..... புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்தி தமிழர் தேசத்தையும் அனைத்துலக சமூகத்தையும் ஏமாற்றுவதற்கே சிங்கள அரசு இப்பேச்சுவார்த்தைகளை பயன்படுத்தியது. பேச்சு என்ற போர்வையில் சிங்கள அரசு தமிழர் தேசம் மீது ஒரு பெரும் படையெடுப்பினைச் செய்வதற்கான ஆயத்தங்களைச் செய்தது. போர் ஓய்வையும் சமாதானச் சூழலையும் பயன்படுத்தி, தனது நலிந்துபோன பொருளாதாரத்தை மீளக்கட்டி தனது சிதைந்துபோன இராணுவ பலத்தை கட்டியெழுப்பியது" - என்று தெளிவான சித்திரம் தருகிறார் பிரபாகரன்.

பிரபாகரனுடனான ஒரு நேர்ப்பேச்சில் "இப்போது நார்வேயின் ஒத்துழைப்பால் அமைதி ஒப்பந்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீங்கள் நார்வேயை நம்புகிறீர்களா?" என்று கேட்டோம். உலகப்பேரரசு ஆசைகொண்ட அமெரிக்காவின் செயல்பாடுகளை விளக்கியபின், பிரபாகரன் சொன்னார். "நாங்கள் நம்பவில்லை. இஸ்ரேல் அமெரிக்காவின் கொடூர முகம். நார்வே – அமெரிக்காவின் மென்மையான முகம்".

ஒவ்வொரு நாட்டின் அரசியலும், எதற்காக எவ்வாறு நடைபெறுகிறது என்ற தெளிந்த உண்மை அப்போது எங்களுக்குத் தரிசனமானது.

"அனைத்துலகத் துணையோடு நடந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஒரு தலைபட்சமாக இலங்கை கிழித்தெறிந்தபோது, சமாதானம் பேசிய உலக நாடுகள் ஒப்புக்குத்தானும் இதனை கண்டிக்கவில்லை. கவலைக்கூட கொள்ளவில்லை: மாறாக சில உலக நாடுகள் அழிவாயுதங்களை அள்ளி கொடுத்து இராணுவப் பயிற்சிகளையும் இராணுவ ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கி வருகின்றன" என்று கூறுகையில் அனைத்துலக நாடுகளின் கபட வேடங்களை கலைக்கிறார் பிரகாகரன் என்று  அவர் சுட்டிக்காட்டுகிறார்.

கல்வித் தகுதி: முதுகலை (தமிழ்), மதுரைத் தியாகராசர் கல்லூரி.

மாணவப் பருவத்தில் 1965 -ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர். அதனால் இந்தியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (DEFENSE OF INDIA RULES) கைதாகி பாளையங்கோட்டைச் சிறையில் மூன்று மாதங்கள் சிறையிருந்த பத்து மாணவர் தலைவர்களில் ஒருவர்.

பணி அனுபவம்: 1968 முதல் 1971 வரை மதுரையில் கல்லூரி விரிவுரையாளர். 1971-ம் ஆண்டு முதல்- 1999 வரை, தமிழ்நாடு அரசின் செய்தி-மக்கள் தொடர்புத் துறைப் பணி. இணை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு.

தாமரை, கணையாழி, தினமணி, புதிய பார்வை, தீராநதி, கதைசொல்லி, ஆனந்த விகடன், காலச்சுவடு, அம்ருதா, உயிர்மை, நந்தன், சதங்கை, இந்தியா டுடே, தமிழ் நேயம், மனஓசை போன்ற இதழ்களில் இவரது படைப்புக்கள் வெளிவந்துள்ளன. கவிதை, கதை, கட்டுரை, உருவகக் கதைகள் எனப் பல அடங்கும்.

கீற்று, பொங்கு தமிழ் போன்ற இணைய இதழ்களில் படைப்புக்கள் தொடர்ந்து வெளிப்படுகின்றன.

தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி - என்னும் அமைப்பின் செயலாளராக இருந்தார். 2008-ல் ஈழத்தின் மீதான யுத்தம் உச்சத்திலிருந்த வேளையில் அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு (ஈழம்) எழுதி வெளிவந்த “இந்தியாவைத் தொடர்ந்து தோற்கடிக்கும் இலங்கையின் இராசதந்திரம்” என்னும் சிறு வெளியீடு பத்தாயிரம் படிகள், தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி சார்பில் இவரது முயற்சியில் மறுபதிப்பு செய்து, இலவசமாக தமிழக முழுவதும் விநியோகம் செய்யப் பட்டது.

மு. திருநாவுக்கரசு எழுதி 1985-ல் வெளியான “தமிழீழ விடுதலைப் போராட்டமும் இந்தியாவும்” என்னும் நூலும் தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி சார்பில் மறுபதிப்புச் செய்து, அனவருக்கும் சென்று சேரும் நோக்கில் ரூ.10/= என குறைவு விலையில் அச்சிட்டு விநியோகிக்கப்பட்டது. இந்நூலின் மறுபதிப்பில் உள்ள முன்னுரை இவர் எழுதியது.

தமிழீழ அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் 2007-ல் இலங்கை விமானப்படையின் குண்டு வீச்சில் கொல்லப்பட்டதற்கு கண்டணம் தெரிவித்து சென்னையில் நடைபெற்ற பேரணியயில் கலந்து கொண்டதால் கைதாகி, பழ.நெடுமாறன், வை.கோ, பெ.மணியரசன், தியாகு ஆகியோருடன் சென்னை ’புழல்’ சிறையிலிருந்தவர்.

2002 ஈழத்தில் ’அமைதி ஒப்பந்த காலம்’. 2002 அக்டோபரில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் விடுதலைப் புலிகளின் முன்னெடுப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ”மானுடத்தின் தமிழ்க்கூடல் மாநாட்டில்” பங்கேற்றார். கவிஞர் இன்குலாப், ஓவியர் மருது, திரை இயக்குநர் புகழேந்தி, விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் - என ’சரிவிகித உணவுக் கலவை போல்’ ஐவர் பங்கேற்ற அந்நிகழ்வில் ஒவ்வொருநாள் நிறைவிலும் ஒருவர் உரையாற்றினர். மூன்றாம் நாள் நிகழ்வில் இவருடைய உரை நிகழ்ந்தது. ’மானுடத்தின் தமிழ்க்கூடல்‘ மாநாட்டின் தொடர்ச்சியாய் ஈழத்தில் பத்து நாட்கள் மேற்கொண்ட பயண அனுபவங்களின் தொகுப்பாக ”ஈழக் கதவுகள்” என்னும் நூல் வெளியானது.
No comments