வடக்கும் கிழக்கும் இணைந்தன!யாழ் பல்கலைக்கழகமும் கிழக்கு பல்கலைக்கழகமும் இணைந்து வடகிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் என்னும் அமைப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையில் இன்று கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சந்திப்பினை தொடர்ந்து இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டமைப்பானது வடகிழக்கின் அனைத்து பல்கலைக்கழகத்தினையும்  உள்ளடக்கியதாக எதிர்காலத்தில் உருவாகவுள்ளதாக வடகிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் நி.தர்சன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கில் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து தமிழ் மாணவர்களையும் ஒன்றிணைத்து பலம்வாயந்த  ஒரு அமைப்பாக இதனை உருவாக்கவுள்ளதாகவும் இது காலத்தின் கட்டாயம் கருதி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் நி.தர்சன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் அவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளுக்கு ஆதரவாக செயற்படும் வகையிலும் இந்த அமைப்பு செயற்படவுள்ளதாக வடகிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் அ.விஜயகுமார் தெரிவித்துள்ளார். 

வடகிழக்கு என்ற இணைந்த பதத்தினை தமிழ் பல்கலைக்கழக மாணவர்களாக் உச்சரிப்பதில் பெருமகிழ்ச்சியடைவதாக வடகிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் ஊடகப்பேச்சாளர் இராசரத்தினம் தர்சன் தெரிவித்துள்ளார்.


No comments