துவிச்சக்கரவண்டி:அரச பணிக்கு தேசிய வாகனம்!இலங்கையில் அரச ஊழியர்களை இலக்கு வைத்து விசேட திட்டமொன்றை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஊழியர்கள் வாரத்தில் ஒரு நாள் துவிச்சக்கரவண்டியில் பணிக்கு வருவதற்கான விசேட திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 

எதிர்வரும் 31ஆம் திகதி நினைவுகூரப்படும் ‘உலக நகரங்கள் தினத்தை’ முன்னிட்டு இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அறிவிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் துவிச்சக்கர வண்டி மூலம் கடமைக்கு சமுகமளிக்க முடியும். துவிச்சக்கரவண்டிகளை வாங்குவதற்கு நிதி மற்றும் அவற்றை பாதுகாப்பாக நிறுத்த இடம் ஒதுக்கீடு உட்பட துவிச்சக்கர வண்டியில் கடமைக்குச் செல்லத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் எமது ஊழியர்களுக்கு செய்து கொடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் ‘துவிச்சக்கரவண்டி வெள்ளி – துவிச்சக்கரவண்டியில் வேலைக்கு வாருங்கள்’ என்ற தொனிப்பொருளில் இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் அங்குரார்ப்பணம் நடைபெறவுள்ளது. பத்தரமுல்லை – செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சில் எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்த நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

No comments