பிலிப்பைன்ஸ் அதிபரைச் சந்தித்தார் ரணில்


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸுடன் இரு தரப்பு கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளார்.

ஆசிய பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மேம்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இன்று (29) காலை மணிலாவில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் ஆர்.மார்கோஸ் ஜூனியரை சந்தித்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மலாகானாங் அரண்மனைக்கு வந்தடைந்த ஜனாதிபதி விக்கிரமசிங்கவிற்கு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி உற்சாக வரவேற்பு அளித்தார்.

அவர்களின் நட்பு உரையாடலைத் தொடர்ந்து, இரு தலைவர்களும் இருதரப்பு விவாதங்களைத் தொடங்கினர்.

இக்கலந்துரையாடலின் போது, ​​புதிய அணுகுமுறைகள் மூலம் இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, பிலிப்பைன்ஸிற்கான இலங்கை தூதுவர் ஷோபினி குணசேகர மற்றும் இலங்கை தூதுக்குழுவினர் கலந்துகொண்டனர்.

No comments