கிரேட் ஸ்டாரை திருப்பி ஒப்படைக்க இங்கிலாந்துக்கு தென்ஆப்பிரிக்கா வலியுறுத்தல்


தென்ஆப்பிரிக்காவில் சுரங்கத்தில் இருந்து 1905-ம் ஆண்டில் வைரம் ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டது. பின்னர் காலனி ஆட்சியாளர்கள் அதனை இங்கிலாந்து அரச குடும்பத்திடம் ஒப்படைத்து விட்டனர். கிரேட் ஸ்டார் என்றும் கல்லினன் 1 என்றும் அழைக்கப்படும் இந்த வைரம் பின்னர் அரச செங்கோலில் பதிக்கப்பட்டு உள்ளது.

உலகின் மிக பெரிய, 530.2 காரட் கொண்ட நீர் துளி வடிவிலான இந்த வைரம், சிலுவையுடன் கூடிய செங்கோலில் சேர்க்கப்பட்டது. இந்நிலையில், ராணி 2-ம் எலிசபெத் மறைவை அடுத்து, இந்த கல்லினன் வைரம் தங்களுக்கு சொந்தம் என்றும் அதனை உடனடியாக திருப்பி ஒப்படைக்கும்படியும் தென்ஆப்பிரிக்கா வேண்டுகோள் விடுத்து உள்ளது.

சமூக ஊடகங்களில் பல பயன்பாட்டாளர்கள், இங்கிலாந்து அரச குடும்பத்தின் கைவசம் உள்ள தங்களது நாடுகளின் பல்வேறு வைரங்களை திருப்பி ஒப்படைக்கும்படி கோரி பிரசாரங்களை தொடங்கியுள்ளனர். அவற்றில் தென்ஆப்பிரிக்க நாடும் இணைந்துள்ளது.


இதுபற்றி தென்ஆப்பிரிக்காவின் சமூக ஆர்வலரான தண்டுக்சோலோ சபேலோ என்பவர், எங்களுடைய நாட்டின் மற்றும் பிற நாடுகளின் தாதுக்கள் எங்களது மக்களின் உழைப்பின் பலனால் தொடர்ந்து இங்கிலாந்துக்கு பயன் அளித்து கொண்டிருக்கின்றன என அவர் கூறியுள்ளார்.

இதனை திருப்பி அளிப்பதற்காக 6 ஆயிரம் பேர் கையெழுத்திட்ட ஆன்லைன் வழியே மனு அளிக்கும் கோரிக்கையும் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

தென்ஆப்பிரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் உயோல்வெது ஜுங்குலா என்பவர் டுவிட்டரில், இங்கிலாந்து செய்து தீங்கு அனைத்திற்கும் திருத்தங்களை செய்ய வேண்டிய தேவை உள்ளது. பிரிட்டனால் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து தங்கம், வைரங்கள் ஆகியவற்றை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

இந்த வைரத்தின் உண்மையான பணமதிப்பு தெளிவாக தெரிய வரவில்லை. எனினும், அரிய மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வைரம் அதிக பணமதிப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.No comments