கூட்டமைப்பும் சஜித் பிரேமதாச கட்சியும் தங்கள் தரப்பினரின் தாவலைத் தடுக்கவே ரணிலின் சர்வ கூட்டுக்கு வெள்ளைக்கொடி! பனங்காட்டான்


ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பு மற்றும் சஜித் பிரேமதாசவின் கட்சி எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்தது இப்போது பகிரங்க ரகசியமாகிவிட்டது. சர்வ கட்சி ஆட்சி அமைப்பிலும் அதே எம்.பிக்கள் கட்சி தாவலாம் என்ற அச்சம் காரணமாகவே இரண்டு கட்சிகளும் ரணிலுக்கு ஆதரவளிக்க வெள்ளைக்கொடி ஏந்தி அவரிடம் சரணாகதி அடைந்துள்ளன.

இலங்கை அரசியலில் உருவான இடர்காலம் என்பது இடைக்காலமாக மாறி, இப்போது நிலைமாறு காலமாக ஆகியுள்ளது. கடந்த மாதம் 20ஆந் திகதி ஜனாதிபதியாகத் தெரிவாகிய ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்து வரும் சர்வகட்சி அரசாங்கம் என்பது பல்வேறு கட்சிகளின் கூட்டாக்கப்படுகிறது.

மைத்திரி - ரணில் இணைப்பில் இயங்கிய நல்லாட்சி அரசுதான் இப்போது ரணிலின் தனித் தலைமையில் சர்வகட்சி அரசாக, பல கட்சிகளை உள்வாங்கி உருவாக்கப்படுவதைப் பார்க்க முடிகிறது.

அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு தம்மை அசைக்க முடியாத தலைவராக ரணில் அமைத்துக் கொள்ளும் நிலைமைக்கு இலங்கையின் பொருளாதாரமுடை, நிதிப்பற்றாக்குறை மட்டும்தான் காரணம் என்றில்லை. சகல அரசியற்கட்சிகளும் தனித்தும், இணைந்தும் இயங்க முடியாத நிலைக்கு அதன் தலைமைகள் தள்ளப்பட்டுள்ளமையே இதன் அடிப்படை.

மகிந்தவின் பொதுஜன பெரமுன இரண்டாகிக் கொண்டிருக்கிறது. சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் கட்சி ஏற்கனவே பிளவு கண்டுவிட்டது. மலைய மக்கள் முன்னணியின் தலைமைக்குள் பனிப்போர் இடம் பெறுகிறது. முஸ்லிம் கட்சிகள் காற்று வீசும் பக்கத்திற்குச் செல்கின்றன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைமை எவ்வாறானதென்பதை ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு பட்டவர்த்தனமாக்கியுள்ளது. ஜே.வி.பி. இளைத்துக் களைத்துப்போன கட்சியாகி விட்டது.

இந்த நிலைமை ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவிக்கு வந்த பின்னர் துளிர் விட்டு, அவர் ஜனாதிபதியாகிய பின்னர் கிளை பரப்பி - அரசியல் சதுரங்கத்தில் பிரித்தாளும் காய்களை உருட்டிவிட்டு ருசி கண்டவரின் சாணக்கியத்துக்கான பரிசு. இதுவே, அவரது சர்வகட்சி அரசாட்சிக்கு பல கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது சரணாகதியாகும் நிலையை ஏற்படுத்தி வருகிறது.

ஐக்கிய தேசியக் கட்சி என்பது எப்போதும் வல்லரசு ஒன்றின் சுவீகாரப்பிள்ளையாகவே அடையாளம் காணப்படுகிறது. இதனை உண்மையாக்கும் வகையில் அமெரிக்க ராஜாங்க செயலாளர் (அமைச்சர்) அன்ரனி பிளிங்கென் இந்த வாரம் தெரிவித்த கூற்று நிரூபிக்கிறது.

ஷஷஇலங்கை தற்போது சவாலான நெருக்கடித் தருணத்தில் உள்ளது. இந்த நெருக்கடியே அதிகளவு ஜனநாயக அரசாங்கத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பானது" என்பது அன்ரனி பிளிங்கெனின் வாய்மொழி.

கம்போடியாவில் இடம்பெற்ற உயர்மட்ட சந்திப்பொன்றில் இலங்கை அமைச்சர் அலி சப்ரியிடம் இவர் தெரிவித்த இக்கருத்து  ஊடகங்களில் மிகப் பிரகாசமாக வெளிவந்துள்ளது.

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், கடந்த சில வாரங்களாக இலங்கையின் நெருக்கடி வேளைகளில் தெரிவித்து வந்து கருத்துகள் மீள்நினைவுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை. மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு ஆதரவான கருத்துகளை இவர் வெளிப்படுத்தி வந்தார். அவ்வேளை சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராகவிருந்த ரணிலின் கருத்துகளும் ஜூலி சங்கின் வழித்தடத்திலேயே வளர்ந்தது.

கோதபாய ஜனாதிபதியாக இருந்தபோது ஜூலி சங்; அவருக்கு பலவகையான நெருக்கடிகளை வழங்கி வந்ததாகவும், அதனால் கோதபாய மனஉழைச்சலுக்கு உள்ளானதாகவும் நம்பகமான செய்திகள் அண்மையில் ஊடகங்களில் வெளிவந்தன.

ஆக, நடைபெற்ற - நடைபெறும் நிகழ்வுகளை ஒன்றோடொன்று கூட்டிப் பார்க்கையில் எங்கிருந்தோ வைக்கப்பட்ட குறி, லாவகமாக ஆட்சி மாற்றமொன்றை தீவில் ஏற்படுத்தி விட்டது.

இந்த மாதம் 3ஆம் திகதி ஜனாதிபதி பதவி வழியான தமது கன்னி உரையை நாடாளுமன்றத்தில் ரணில் நிகழ்த்தினார். சுமார் 30 நிமிடங்களைக் கொண்ட அமைதிப் போக்கிலான, சாது வடிவிலான இந்த உரை உள்நாட்டில் மட்டுமன்றி, சர்வதேச அரங்கிலும் அவருக்கு மகிமையை ஏற்படுத்தி உள்ளது.

ஷஷகடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக நாடு நிலையற்றதாக மாறி விட்டது..... பேரழிவிலிருந்து ஒரு நாட்டை நான் எடுத்துக் கொண்டேன்.....|| என்ற இவரது சொல்லாடல்கள் ராஜபக்சக்களின் தலைமையிலான பொதுஜன பெரமுனவை நேரடியாகக் குத்திக் காட்டியதை அவதானிக்க வைத்துள்ளது. பெரமுனவின் ஆதரவில் கதிரை ஏறிய ரணில் அவர்களைச் சாடுவதால் பாதிப்பு ஏற்படாதா என்று கேட்டால், அதற்கான காலநிலை இன்று இலங்கை அரசியலில் இல்லை என்பதே பதில்.

புதிய அரசியலமைப்பு, ஜனாதிபதி அதிகாரக் குறைப்பு போன்றவைகளை நடைமுறைப்படுத்தப் போவதாகக் கூறியுள்ள ரணில், சகல அரசியல் கட்சி தலைவர்களையும் கொண்ட தேசிய சட்டமன்றத்தை நிறுவப்போவதாகவும் கோடு காட்டியுள்ளார்.

அதேசமயம் தமிழர் பிரச்சனைத் தீர்வு பற்றியும் சில வார்த்தைகளால் கோலம் கீறியுள்ளார். அது பின்வருமாறு அமைந்துள்ளது:

ஷஷதமிழ்ச் சமூகம் நீண்டகாலமாக எதிர்நோக்கியுள்ள அரசியல் தீர்வை வழங்குவது இன்றியமையாதது. யுத்தத்தின் க~;டங்கள் காரணமாக அவர்கள் சமூக, பொருளாதார பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். தீர்க்கப்பட வேண்டிய பல காணிப் பிரச்சனைகள் உள்ளன. வடக்கில் அபிவிருத்திப் பணிகள் பற்றி நாம் புதிதாகச் சிந்திக்க வேண்டும். இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் அவர்களுடன் நெருக்கமாக இணைந்து செயற்படுவதன் மூலம் வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வோம் என நாம் எதிர்பார்க்கிறோம். அவர்களின் வருகைகள் மூலம் தாய்நாட்டின் முதலீடுகளை நாங்கள் எதிர்நோக்குகிறோம்||.

ரணிலின் இந்த அறிவிப்பின் ஊடாக, இருவேறு அர்த்தங்களைக் காணமுடிகிறது. தமிழரின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற அவர் விரும்புகிறார் என்பது ஒன்று. இவ்வாறு செய்வதன் ஊடாக புலம்பெயர் தமிழரின் முதலீட்டை இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு மூலதனமாக்கும் உள்நோக்கம் அவரிடம் உள்ளது என்பது இரண்டாவது.

அதாவது, புலம்பெயர் தமிழரின் பணப்பெட்டியில் கண்வைத்து அதனைக் கவர்வதற்கான சூழ்ச்சியாக தமது நரித்தந்திரப் பாணியை ரணில் மேற்கொள்கிறார்.

முன்னாள் ஜனாதிபதி கோதபாய, பதவி இழப்பதற்குச் சில வாரங்களுக்கு முன்னர் கூட்டமைப்பினரைச் சந்தித்து எவைகளை முன்னிறுத்தி கவர்ச்சிகரமாக உரையாடினாரோ, அவைகளை அப்படியே அச்சரம் பிசகாது ரணிலும் ஒப்புவித்துள்ளதை இங்கு பார்க்க முடிகிறது.

ரணிலின் தமிழர் பிரச்சனை தீர்வு அறிவிப்பு தொடர்பான கருத்துப் பரிமாற்றம் ஒன்று இந்தவாரம் கொழும்பில் இடம்பெற்றது. இதில் சர்வகட்சி ஆட்சி அமைப்பு பற்றி முக்கியமாக உரையாடப்பட்டது.

தேசிய வேலைத்திட்டமொன்றை உருவாக்குவதற்கு கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்குமென இங்கு அறிவிக்கப்பட்டது. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உடல்நிலை காரணமாக இச்சந்திப்பில் பங்கேற்கவில்லை. கூட்டமைப்பின் மூன்று கட்சிகளின் தலைவர்களும் இதில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. சர்வகட்சி அரசில் பங்கேற்பது பற்றி கூட்டமைப்பு இன்னமும் முடிவெடுக்கவில்லை என்றும், நிலைமையைப் பரிசீலனை செய்து முடிவெடுக்கப்படும் என்றும் ரணிலுக்குத் தெரிவிக்கப்பட்டது.

ரணில் விக்கிரமசிங்க முறைப்படி ஜனாதிபதியாகவில்லை என்றும், அப்பதவியிலிருந்து அவரை அகற்ற வேண்டும் என்றும், நாடாளுமன்றம் உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும் என்றும் கடந்தவாரம் வரை பொதுவெளியில் கோசமெழுப்பி வந்த சுமந்திரனும், அவரது புதிய ஜோடியான சாணக்கியனும் எந்த நிலைப்பாட்டில் ரணிலைச் சந்திக்கச் சென்றனரென்பது பதில் காணமுடியாத ரிசிமூலம்.

இச்சந்திப்பில் ரணில் போட்டுடைத்த ஒரு விடயம்தான் இப்போது தமிழர் அரசியல் அரங்கில் சூடுபிடித்துள்ளது.

கடந்த மாத ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்ததாக அவரின் தேர்தல் முகவர் ஹரின் பெர்ணான்டோ அன்றே தெரிவித்திருந்தார்.

இதனை மறுதலிக்கும் வகையில், ஷஷகூட்டமைப்பினராகிய நாங்கள் ஜனாதிபதி தேர்தலில் உங்களுக்கு வாக்களிக்காத போதிலும்....|| என்று சுதந்திரன் இக்கூட்டத்தில் உரையாற்ற ஆரம்பிக்க, அதனை இடைமறித்த ரணில் ஷஷஉங்கள் ஆட்கள் சிலரும் எனக்கு வாக்களித்தனர்|| என்று கூறினார்.

சுதந்திரன் மீண்டும் அதனை மறுதலிக்க, ரணில் மீண்டும் தனது கூற்றை வலியுறுத்தினார். இதன்போது தலையிட்ட தர்மலிங்கம் சித்தார்த்தன், ரகசிய வாக்கெடுப்பு விபரம் உங்களுக்கு எவ்வாறு தெரியும் என்று கேள்வி எழுப்ப, வாக்களிப்பு விபரம் முழுமையாக தமக்குத் தெரியுமென்று ரணில் பதிலளித்த போது விடயம் தற்காலிகமாக முற்றுப்பெற்றது.

வாக்களிப்பின் போது, கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமது வாக்குச் சீட்டை தேர்தல் சட்டத்தை மீறி படமெடுக்க முனைந்த போது நாடாளுமன்ற அலுவலர் அதனைப் பறித்தெடுத்தது தெரிந்த விடயம். இவர் ரணிலுக்கு வாக்களித்ததை நிரூபிக்கவே படமெடுக்க முனைந்தார் என்பதும் ரகசியமன்று.

கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக்கட்சியினர் சோரம் போகாதவர்கள் என்றில்லை. 1977ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்ற கனகரத்தினம் ஐக்கியதேசியக் கட்சிக்குப் பாய்ந்து சென்று பதவி பெற்றார். 2010இல் அம்பாறை மாவட்டத்தில் தெரிவான கூட்டமைப்பின் பியசேன கட்சி மாறி ஓடினார். சுமந்திரனின் அண்மைய சகாவான சாணக்கியன் முன்னர் மகிந்தவின் கட்சியில் போட்டியிட்டு கடந்த தேர்தலில் கூட்டமைப்புக்குள் பாய்ந்தவர்.

சாணக்கியன் தற்போது கூட்டமைப்பில் இருந்தாலும், மகிந்தவுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார் என்று சுமந்திரன் தெரிவித்த கருத்து கூட்டமைப்புக்குள் குண்டொன்றை வீசியதாகி விட்டது.

இவைகளின் ஊடாக சர்வகட்சி ஆட்சி என்ற பெயரில் இடம்பெறும் சம்பவங்களின் ஓர் உண்மை நன்றாகத் தெரிகின்றது. தங்கள் கட்சிக்காரர்கள் ரணில் பக்கம் தாவிச்சென்று பதவிகளைப் பெற்று விட்டால், தங்கள் கட்சிகள் பலமிழந்துவிடும் என்ற அச்சத்தால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், ஐக்கிய மக்கள் கட்சியும் ரணிலின் சர்வகட்சி அமைப்புக்கு வெள்ளைக் கொடி காட்டியுள்ளனர்.

ஆனாலும், ரணில் அதற்கூடாகவும் தனது வழக்கமான அரசியல் சித்து விளையாட்டை மேற்கொண்டு வருகிறார். அடுத்தடுத்த வாரங்களில் இன்னும் பல வெளிச்சத்துக்கு வரும். காத்திருக்கலாம்!

No comments