தமிழில் பாட கேட்டார் டக்ளஸ்! நாட்டின் பன்மைத்துவத்தினை வெளிப்படுத்தும் வகையில் அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாடுகளும் அமைய வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளாராம்..

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று(15) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்தில் சுதந்திர தின ஏற்பாடுகள் தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையிலேயே குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டது.

மேலும் குறித்த கலந்துரையாடலில், நல்லாட்சி என்று சொல்லப்பட்ட அரசாங்கத்தின் காலத்தில் தற்போதைய ஜனாதிபதியின் நல்லெண்ண வெளிப்பாடாக சுதந்திர தினத்தில் தேசிய கீதம் தமிழிலும் பாடப்பட்டமையை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்திலும் அந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம்.

கடற்றொழில் அமைச்சரின் குறித்த வேண்டுகோள் அமைச்சரவையினால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பன்மைத்துவம் சமத்துவம், சம உரிமை போன்றவை கடந்த காலங்களில் கொள்கையளவில் மாத்திரம் இருந்தமையும் நாடு பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு காரணமாக இருந்தது என்பதை சுட்டிக்காட்டியதுடன், எதிர்காலத்தில் இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களும் மனப்பூர்வமாக உணர்ந்து கொள்ளும் வகையில் கொள்கை ரீதியான தீர்மானங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments