முதலீட்டு வாய்ப்புக்காக திறக்கப்படுகிறது தாமரைக் கோபுரம்


தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமாக கருதப்படுகின்ற தாமரைக் கோபுரம் அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் திறக்கப்படவுள்ளது.

வர்த்தக நன்மைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் முதலீட்டு வாய்ப்புகளுக்காக இந்த 356 மீற்றர் உயர கோபுரத்தை திறக்க கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ தனியார் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, தாமரை கோபுரத்தில் வர்த்தக நிலையங்கள், காட்சியறைகள், மாநாட்டு மண்டபங்கள் மற்றும் பிரத்தியேகமான கடைகளுக்கான அலுவலக வசதிகளைப் பெற்றுக்கொள்ள முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

சர்வதேச அளவிலான நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதற்கான வாய்ப்பும் கிடைக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

தாமரைக் கோபுரத்தில் 50 தொலைக்காட்சி நிலையங்கள், 35 வானொலி நிலையங்களுக்கான தொலைதொடர்பு வசதிகள், முதல் மாடியில் வர்த்தக கடைத்தொகுதியொன்றும் மூன்றாவது மற்றும் நான்காவது மாடிகள் வைபவங்கள் நடத்துவதற்கான மண்டபங்களும் ஆறாவது மாடியில் அமைக்கப்பட்டுள்ள உணவகமானது, சுழலும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

இங்கு 400 பேர் அமரக்கூடிய மாநாட்டு மண்டபம், ஆடம்பர அறைகள், ஹோட்டல்கள், தொலைத்தொடர்பாடல் அருங்காட்சியகம் என பல வசதிகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. 

No comments