நாங்கள் வெளியேற மாட்டோம்: முடிந்தால் எங்களை அனுப்பி வையுங்கள்: கோட்டகோகம எதிர்ப்பாளர்கள் சவால்


நேற்று வெள்ளிக்கிழமை காலி முகத்திடலிலிருந்து கோட்டகோகமவை விட்டு வெளியேறப் போவதில்லை என்றும், முடிந்தால் தம்மை அனுப்பி வைக்க முயற்சி செய்யுமாறும் சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு சவால் விடுத்துள்ளனர் போராட்டக்காரர்கள்.

காலி முகத்திடலை பிரதிநிதித்துவப்படுத்தும் செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான சாந்த விஜேசூரிய, தாம் 4 மாதங்களுக்கு முன்னர் காவல்துறையினரிடமோ அல்லது அரசாங்கத்தினதோ அனுமதி பெற்று மக்கள் போராட்ட இடத்திற்கு வரவில்லை எனவும், காவலதுறை வருவதால் தாம் அந்த இடத்தை விட்டு வெளியேற மாட்டோம் எனவும் தெரிவித்தார். 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் ராஜபக்ச எம்.பி.க்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்புவதில் போராட்டம் வெற்றி பெற்றது.

அரசியல் தலைவர்களை மாற்றுவதற்காக அல்ல, முறைமையை மாற்றுவதற்காக நாங்கள் இங்கு வந்துள்ளோம். கடந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பெரும் ஆணை பெற்றிருந்த நிலையில், தலைவர் என்ற முறையில் தோல்வியடைந்ததன் காரணமாக தனது ஆசனத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. அப்படியானால், மக்கள் ஆணையின்றி ஒரே ஒரு போனஸ் ஆசனத்துடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக வந்த ரணில் விக்கிரமசிங்க யார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை 5.00 மணிக்குள் இந்த இடத்தை காலி செய்யுமாறு காவல்துறையினர் அறிவித்தனர். ஆனால் அவர்களின் அறிவிப்புகளுக்கு செவிசாய்க்க மாட்டோம். எங்களின் வழக்கறிஞர்கள் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்களை தாக்கல் செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நீதிமன்ற தீர்ப்பு வந்தால் பரிசீலிப்போம். கூட்டு காலிமுகத்திடலில் ஈடுபடுபவர்கள் எப்போது எங்கு வெளியேறுவது என்பதை தீர்மானிப்பார்கள் அதுவரை நாங்கள் வெளியேற மாட்டோம். மேலும், முடிந்தால் எங்களை அனுப்ப முயற்சி செய்யுமாறு சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் கூறுகிறோம் என்று அவர் மேலும் கூறினார்.

No comments