கர்தினால்:பொட்டுக்கேடு வெளிவரும்!இலங்கையில் அரங்கேறிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆழமான விசாரணகளை முன்னெடுத்தால், அதனுடன் தமக்குள்ள தொடர்புகள் வெளிப்பட்டு விடும் என்ற அச்சத்தினாலேயே அரசியல் தலைவர்கள் அது குறித்த விசாரணைகளில் கரிசணை கொள்ளாமலுள்ளனர் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றஞ்சுமத்தியுள்ளார். 

 பல தசாப்தங்களாக சுயநலமே நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. சொத்துக்கள் மீதான பேராசைக்கு அடிமையாகியுள்ளதால் கொள்கைகளைக் காட்டிக் கொடுக்கும் கலாசாரமே இன்று நடைமுறையிலுள்ளது. இதற்கு ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டிருப்பது பொருத்தமற்றது. நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்களின் சுயநலத்தின் காரணமாகவே நாடு இன்று இந்த நிலைமையை அடைந்துள்ளது. சமூகம் என்ற ரீதியில் நாமும் அதனை அங்கீகரித்திருக்கின்றோம். 

ஒவ்வொரு தேர்தல்களிலும் மீண்டும் மீண்டும் ஊழல் , மோசடிக்காரர்களுக்கு வாக்களித்து அவர்களிடமே நாட்டை ஒப்படைத்துள்ளோம். எனவே இன்று ஏற்பட்டுள்ள இந்த நிலைமைக்கு நாம் அனைவரும் பொறுப்பு கூற வேண்டியவர்களாவோம். எனவே நாம் எமது சிந்தனையை மாற்ற வேண்டும். முறைமை மாற்றம் என்பது எம்மிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதனை வெறும் வாய் வார்த்தைகளால் அன்றி , யதார்த்தத்தில் நடைமுறை சாத்தியமானதாக்க வேண்டும். சமூக மாற்றமடைய வேண்டியது அத்தியாவசியமானதாகும். 1956 இலிருந்து நாட்டில் இனவாதம் தூண்டப்பட்டது. சிங்களவர்கள் மாத்திரமே எனக் கூறினர். இதன் பலனாகவே மோசமான யுத்தத்தை எதிர்கொள்ள நேரிட்டது. 

1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தின் பின்னர் அபிவிருத்தியடைந்திருக்க வேண்டிய இலங்கை , யுத்தத்தினால் இன்று ஏனைய நாடுகளிடம் கையேந்தும் நாடாகியுள்ளது. அன்று சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ , சிங்கப்பூரை இலங்கை போன்று மாற்ற வேண்டும் என்றார். 

ஆனால் இன்று இலங்கையின் நிலை என்ன? இந்நாட்டின் ஆட்சியாளர்களே இவ்வாறான நிலைமையை ஏற்படுத்தியுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 40 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. இந்த தாக்குதல்களால் பாதிக்கப்பட்டோருக்கான நீதி எங்கே? 272 அப்பாவி மக்களின் உயிர்கள் வீசி எறியப்பட்டுள்ளன. இது தொடர்பில் தீர்க்கமான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எதற்காக ஆட்சியாளர்கள் தயங்குகின்றனர்? அவ்வாறெனில் இதில் ஏதோ ஒரு இரகசியம் இருக்கிறது என்றல்லவா அர்த்தம்? உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆழமான விசாரணகளை முன்னெடுத்தால், அதனுடன் தமக்குள்ள தொடர்புகள் வெளிப்பட்டு விடும் என்ற அச்சத்தினாலேயே விசாரணைகளில் கரிசணை கொள்ளாமலுள்ளனர். 

கடந்த 75 ஆண்டுகளாக நாம் பயணித்த பாதை தவறானது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆட்சியாளர்களை மாற்றும் தைரியம் எமக்கு காணப்படவில்லை. எனினும் அந்த மாற்றம் அத்தியாவசியமானதாகும். 

இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக்குவதாகக் கூறினார்கள். தாமரை கோபுரம் என்ற ஒன்றை எதற்காக நிர்மாணித்தனர் எனத் தெரியவில்லை. சுபீட்சமான எதிர்காலம் எனக் கூறினர். மக்கள் ஒருவேளை உணவைக் கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலைமையை அடைந்துள்ளமையே இவர்களின் சுபீட்சமாகும். 75 ஆண்டுகளாக இழைத்த தவறினால் பெற்றுக் கொண்ட படிப்பினையின் மூலமேனும் நாம் இனி சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

No comments