எனது வீடு எரிவதற்கு ரவூப் ஹக்கீமே காரணம் - ரணில்


சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமினாலேயே எனது வீடு தீக்கிரையாக்கப்படக் காரணம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நீங்கள் பதிவிட்ட டுவிட்டரே எனது வீடு தீக்கிரையாகக்  காரணம் என்று இன்று திங்கட்கிழமை (11) நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ரவூப்  ஹக்கீமை கடுமையாகச்  சாடியுள்ளார். இதனையடுத்து கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் பெரும் வாய்த்தர்க்கமும் ஏற்பட்டுள்ளது.

இதேநேரம் இன்று பிற்பகல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காணொளி ஊடாக கருத்துரைத்துள்ளார்.

நாட்டில் நிலவும் பலவீனமான நிர்வாக முறைமையினால், இந்த நாட்டின் பொருளாதார நெருக்கடியை ஒரு சில நாட்களில் மீளப்பெற முடியாது. அதனை மீட்பதற்கு குறைந்தது ஒரு வருடமாவது ஆகும் எனத் தெரிவித்தார்.

நாடு பாரிய பொருளாதாரப் பேரழிவிற்குள்ளான வேளையில் தான் நான் நாட்டைப் பொறுப்பெடுத்தேன் என  ரணில் கூறினார்.

குறைந்தபட்சம் 04 வருடங்கள் நீண்டகால தீர்வுகளுடன் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்பதை சர்வதேச நாணய நிதியம் கூட ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எரிவாயு மற்றும் எண்ணெய்க்காக வரிசையில் மக்கள் அவதிப்படுவதற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாகவும்  தெரிவித்துள்ளார்.

ஜூலை 9ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கூட்டங்களையும் ஒத்திவைத்துவிட்டு வீட்டில் இருந்தேன். அப்போது பரபரப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் வீட்டை விட்டு வெளியேறுமாறு காவல்துறையினர் பணித்தனர். இதன் காரணமாக மாலையில் தானும் மனைவியும் வீட்டை விட்டு வெளியேறினோம். பின்னர் எனது வீடு தீக்கிரையாக்கப்பட்டு விட்டது என்ற செய்தி தெரியவந்தது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலும் வெளிநாட்டிலும் தமக்கு இருந்த ஒரே வீடு இந்த வீடு இதுதான். தற்போது அது எரிந்து நாசமாகிவிட்டது. அதில் சேகரிக்கப்பட்ட அனைத்து பெறுமதிமிக்க புத்தகங்களையும் நன்கொடையாக வழங்குவதற்கு எனது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க உடன்பட்டிருந்தார். அரிய போர்த்துக்கீசியப் படைப்புக்களும் இருந்தன என்றார்.

தாம் ராஜினாமா செய்யமாட்டேன் என்று அங்கு ஒருபோதும் கூறவில்லை. சர்வதேச நாணய நிதியம், உணவு, எண்ணெய், மற்றும் எரிவாயு தொடர்பான கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிப்பதால் அரசாங்கம் அமைந்தவுடன் பதவி விலக இருந்ததாகவே நான் கூறியிருந்தேன் என்றார்.

ஆனால் இதனை திரிவுபடுத்தி நான் பதவி விலகப் போவதில்லை என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகின. அதனைப் பல முறை சரிய செய்யக் கோரிக்கை விடுத்த போதும் அது நடக்கவில்லை. இதுவே பொதுமக்களை எனது வீட்டுக்கு அழைத்து வருமாறு செய்திகள் வெளிகின என்று ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

No comments