முடங்குவது இயற்கையின் தொழிற்பாடு! முடக்குவது இயலாமையின் வெளிப்பாடு! பனங்காட்டான்


ஒரு நாடு, ஒரு சட்டம் என்று கூறப்படும் காலத்தில் இரண்டு முரண்பட்ட தலைமைகளுக்கிடையில் மக்கள் ததிங்கிணத்தோம் போடுகிறார்கள். எல்லாமே இல்லையென்று ஆகிவிட்ட வாழ்வில் பஞ்சமும் பட்டினியும் போட்டிபோட மக்கள் பசியால் மடியும் நாட்கள் கண்முன்னே தெரிகிறது. இதற்காகவே சில நாட்களுக்கு நாடு முடக்கப்படுகிறது. இதனை நாடு முடங்குகிறது என்று கூறி தப்பப் பார்க்கிறது ஆட்சி பீடம். 

தேர்தல்கள் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படுவது ஜனநாயக நாடுகளின் நடைமுறை. தேர்தல் விஞ்ஞாபனத்திலும், தேர்தல்கால பரப்புரைகளிலும் நம்பிக்கை வைத்து மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். 

ஓர் அரசாங்கம் ஆட்சி நடத்துவது என்பது மக்களின் தேவைகளை அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் அறிந்து அவற்றை உரிய முறையில் செயற்படுத்தவே தவிர, மக்களை அடக்கி ஆட்சிபுரிவதற்கல்ல. அதற்குப் பெயர் ஜனநாயகமும் அல்ல. 

இந்தப் பின்னணியில் நின்று பார்த்தால், இலங்கையில் எத்தகைய ஆட்சி நடைபெறுகிறது என்பதை ஒரு சாமானியனே இலகுவாகக் கூறி விடுவார். ஜனநாயகம் என்ற பெயரில் மமதை பிடித்த ராணுவச் சிந்தனையும் ஊழலுமே இன்றைய அத்தனை சீரழிவுகளுக்கும் காரணம்.

இயற்சை உரத்தை உற்பத்தி செய்து அதனைக் கையிருப்பில் வைப்பதற்கு முன்னரே இறக்குமதி உரத்தைத் தடை செய்ததால் வந்த வினையே இன்றைய அத்தனை நெருக்கடிகளுக்கும் மூல காரணம். நவீன உலகில் எரிவாயு அத்தனை செயற்பாடுகளுக்கும் அத்தியாவசியமானது. விவசாயமும் மீன்பிடியுமே இலங்கை மக்களின் பிரதான தொழில்கள் என்ற அடிப்படையில், எரிவாயு இன்மை என்பது இவை இரண்டையும் முழுமையாகப் பாதித்துவிட்டது. 

இலங்கையின் வருவாய் ஆங்கிலத்தில் ரி என்ற முதல் எழுத்தில் தங்கியிருப்பது சர்வதேசமும் அறிந்தது. வுநயஇ வுழரசளைஅஇ வுநஒவடைந (தேயிலை உற்பத்தி, உல்லாசப் பயணிகள் சுற்றுலா, உடுபுடவை தயாரிப்பு) என்பவையே இந்த மூன்றும். 

தேயிலை மலைநாட்டுடன் தொடர்புபட்டது. உல்லாசப் பயணம் தீவின் இயற்கை வளத்துடன் சம்பந்தப்பட்டது. உடுபுடவை தயாரிப்பு ஜே.ஆர்.ஜெயவர்த்தன காலத்தில் உருவாக்கப்பட்ட சுதந்திர வர்த்தக வலயத்துடன் பங்குகொண்டது. 

இலங்கைக்கான வெளிநாட்டுச் செலாவணியை இந்த மூன்று துறைகளுமே பெற்றுக் கொடுத்தன. இதனால் டாலர் தட்டுப்பாடு இருக்கவில்லை. 

நான் வெளிநாடொன்றில் இலங்கை விவகாரம் தொடர்பான கருத்தரங்கில் 1990களில் பங்குபற்றியபோது இலங்கையின் பிரதான ஏற்றுமதி என்ன என்ற கேள்வி என்னிடம் முன்வைக்கப்பட்டது. முன்னர் சிலோன் ரீ (இலங்கைத் தேயிலை), இப்போது இலங்கைத் தமிழ் அகதிகள் (வுயஅடை சுநகரபநநள) என்று நான் பதிலளித்தபோது அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியுடன் என்னைப் பார்த்தனர். 

இப்போது ஒரு கோடி வரையான தமிழர்கள் புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்றனர். இலங்கைக்கு உதவுங்கள் என்று இவர்களைப் பார்த்து இலங்கையின் அரசியல் தலைவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். இது, அகதிகள் ஏற்றுமதி என்று நான் அன்று கூறியதை ஏற்க வைத்துள்ளது. 

பிச்சா பாத்திரத்துடன் கோதபாய குழுவினர் ஒவ்வொருவரும் உலா வருகின்றனர். இரண்டு அமைச்சர்கள் இப்போது இரண்டு நாடுகளுக்கு பிச்சைக்குச் சென்றுள்ளனர். சர்வதேச அரங்குகளில் இலங்கையின் நீள்கரங்கள் பிச்சைக்காக நீட்டப்படுகின்றன. இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் மேற்குலக ராஜதந்திரிகளிடம் ஒரு பட்டியலை நீட்டி - பார்த்துப் போடுங்கள் என்று மண்டாடப்படுகிறது. 

இரண்டாண்டுகளுக்கு முன்னர் ராஜபக்சக்கள் ஆட்சிக் கதிரைகளை தமதாக்கி, கைகளையும் கால்களையும் அகல விரித்து, உலகின் அத்தனை நாடுகளிலும் கொள்ளைச் சொத்துகளை குவித்தபோது, இதனை அறிந்திராத 69 லட்சம் சிங்கள மக்கள், இந்த அரசு தங்கள் அரசு என்று நெஞ்சை நிமிர்த்தி தலையை உயர்த்தினார்கள். இன்று அவர்களே சந்திகளிலும் சந்தைகளிலும் ராஜபக்சக்களை வெளியேறுமாறு கூவி பதவிகளைப் பறித்து துரத்திக் கொண்டிருக்கின்றனர். 

இப்போது எஞ்சியிருப்பவர் கோதபாய ராஜபக்ச மட்டுமே. தனது இருப்பை நிலைநிறுத்துவதற்காக, கடந்த தேர்தலில் நிர்மூலமான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தமக்கு முன்னால் நிறுத்தி அவரின் நிழலுக்குள் மறைந்திருக்கிறார். ஆனால் பதவி பறிபோன ராஜபக்சக்கள் சும்மா இருப்பதாகவில்லை. 

மகிந்த - பசில் சகோதரர்கள் கோதாவையும் ரணிலையும் பிரித்துவிடும் சூழ்ச்சிகளில் இரவு பகலாக தொழிற்படுகின்றனர். கோதவுக்கும் ரணிலுக்குமிடையேயான பனிப்போரை பகிரங்கப் போராக்கி அதில் குளிர்காய மகிந்தவும் பசிலும் முனைகின்றனர். 

கோதா கோ ஹோம் பேரெழுச்சி மார்ச் மாதம் 31ம் திகதி ஆரம்பமாவதற்கு முன்னர், இலங்கை கோரிய நிதி மனுக்களை நிராகரித்து வந்த முக்கிய நாடுகள் இன்று இலங்கையின் தேவைகளை நிறைவேற்ற முன்வந்துள்ளன. 

சர்வதேச நாணய வங்கி நிச்சயம் உதவுமென அமெரிக்கா சொல்கிறது. அதன் வழியில் சர்வதேச நாணய வங்கி அதிகாரிகள் கொழும்பு சென்று ஆட்சிபீட உச்சங்களை சந்திக்கின்றனர். ஜி-7 மாநாட்டில் பங்குபற்றிய அமெரிக்க அதிபர் பைடன் இருபது லட்சம் டாலர் (2 கோடி) இலங்கைக்கு வழங்கப்படுமென அறிவித்துள்ளார். யூன் முற்பகுதியில் அமெரிக்கா வழங்கிய பன்னிரண்டு மில்லியனுக்கு மேலதிகமாக இந்த 2 கோடி டாலர். 

எம்.சி.சி. உடன்படிக்கை மூலம் இலங்கைக்கு அமெரிக்கா 400 மில்லியனை கடந்த வருடம் இனாமாக (நன்கொடை) வழங்க முன்வந்தபோது அதனை ராஜபக்சக்கள் மறுத்தனர். இன்று ரணிலின் முகத்துக்காக அமெரிக்க உதவி இலங்கைக்குப் போகிறது. 

இந்தியப் பிரதமர் மோடியும் விடுவதாக இல்லை. ஏற்கனவே இப்பந்தியில் குறிப்பிட்டவாறு சீனா இலங்கையுடன் சம்பந்தம் வைத்திருக்கும்வரை இந்தியாவின் உதவிக்கு பஞ்சம் இருக்காது. ஆனால், யார் எவ்வளவு கொடுத்தாலும் தலைநிமிரும் நிலையில் இலங்கை இல்லை. அதலபாதாளத்தில் இருப்பவர்களை எத்தனை ஏணிகள் கொண்டும் தூக்க முடியாது.

இப்பொழுது இலங்கைக்குக் கிடைக்கும் உதவிகள் அத்தனையும் ரணிலை தொடர்ந்து பிரதமர் கதிரையில் நிலைத்திருக்கச் செய்யவே என்பது மூடுமந்திரமன்று. இது கோதாவுக்குத் தெரியாததல்ல. 

பசி வந்தால் பத்தும் பறந்திடும் என்பர். இன்று அதற்கும் அப்பால் பஞ்சமும் பட்டினியும் ஒட்டி வந்து வாட்டுகின்றன. எவர் எவ்வளவு தந்தாலும் கை நீட்டும் தயார் நிலையில் இலங்கை உள்ளது. பிச்சை எடுக்கும்போது அதனைப் போடும் கையைப் பார்க்க முடியாது. போடப்படுவதை எண்ணுவதே முதல் வேலையாகவுள்ளது.

இவ்வாறு பிச்சை எடுக்கும் பணத்தில்கூட ஊழலும் மோசடியும் இடம்பெறாதென்பதற்கு உத்தரவாதம் இல்லை. பத்து, இருபது வீத கமிசன்கள் முழுமையாக அரசாங்கத்திலிருந்து வெளியேற்றப்படவில்லை. அந்தக் குரக்கன் சால்வைகள் தொங்கிக் கொண்டேயிருக்கின்றன. 

குரக்கன் சால்வைகளை அணிபவர்கள் தங்கள் அரசியல் தேவைகளுக்காக அதனைக் கழுத்தில் போடுகிறார்களே தவிர, அதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்திருக்கவில்லை. இவர்களின் தந்தை அமரர் டி.ஏ.ராஜபக்ச ஒரு பரம்பரை விவசாயி. விருப்பமில்லாது அரசியலுக்கு இழுத்து வரப்பட்ட இவர் 1947 முதல் 1965 வரை அம்பாந்தோட்டையின் பெலியத்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியில் காணி விவசாய அமைச்சராக பதவி வகித்தவர். இவரின் பிரதான விவசாய உற்பத்தி குரக்கன். அம்பாந்தோட்டை  மாவட்டத்தில் மட்டுமன்றி அயற்பிரதேசங்களிலும் குரக்கன் விவசாயத்தை ஊக்குவித்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு காணச் செய்தவர். அதன் அடையாளமாகவே குரக்கன் நிறத்தினாலான சால்வையை அணியத் தொடங்கினார். 

உள்ளூர் மக்களுக்கு உணவளித்த குரக்கனுக்கு மதிப்பளித்த உன்னதமான அடையாளமே குரக்கன் நிற சால்வை. இவரது பிள்ளைகள் (கோதபாய தவிர), பேரப்பிள்ளைகள் தங்கள் அரசியல் பிழைப்புக்காக குரக்கன் சால்வையை அணிகின்றார்களே தவிர தங்கள் தந்தை வழியில் அதன் மகத்துவத்துக்கு மதிப்பளித்தவர்கள் அல்ல. மாறாக நாட்டின் வருமானத்தை கொள்ளையடித்து வெளிநாடுளில் பதுக்கியவர்கள். நாடு பாழாகிப் போனால், எங்கு சென்றும் குசியாக வாழலாம் என்பதற்காக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டவர்கள். 

இதன் பலாபலனை இன்று மக்கள் அனுபவிக்கின்றனர். பேருந்துகள் ஓடவில்லை. தொடருந்துகள் தண்டவாளத்தில் நிற்கின்றன. உணவகங்கள் மூடப்படுகின்றன. விவசாய நிலங்கள் கருகிக் காய்கின்றன. மீன்பிடித் தொழில் அறவே கைவிடப்படுகிறது. குழந்தைகளுக்குப் பால் மா இல்லை. சாதாரணமான மரக்கறிகள்கூட இல்லை - இருந்தால் ஆனை விலை, குதிரை விலை. அரசாங்க அலுவலகங்களில் வேலை நாட்கள் குறைக்கப்படுகின்றது. நீதிமன்றங்களும் மூடப்படுகின்றன. பாடசாலைகள் மூடப்படுகின்றன. கல்வி இல்லாச் சமூகமொன்று கனகச்சிதமாக உருவக்கப்படுகிறது. 

இதற்குள் அடுத்த வருடம் தேர்தல் என்று ஒரு அறிவிப்பு. பெப்ரவரி மாதத்துக்குள் உள்;ராட்சித் தேர்தல்களை வைக்க வேண்டுமென்று குரல் கொடுக்கும் இருபது வீதம் புகழ் பசில் ராஜபக்ச, இத்தேர்தலில் தங்கள் கட்சியே வெற்றி பெறுமென்று சவால் விடுகிறார். 

கடந்த பொதுத்தேர்தலின்போது யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் முடிவுகளில் செய்ய முடிந்ததை வரப்போகும் தேர்தலிலும் செய்ய முடியுமென நம்புகிறார் போலும். அனுபவஸ்தர் அல்லவா?

அன்றாட வாழ்வுக்கே காசில்லை. அடுத்த வருடம் தேர்தலா? அப்படி எதுவும் நடைபெறாது என்று அடித்துச் சொல்கிறார் பிரதமர் ரணில். யார் சொல்வதை நம்புவது? அரசாட்சியின் தலைவர் யார்? ஒற்றைத் திருக்கல் வண்டியை இரண்டு மாடுகள் இழுத்தால் இதுதான் நிலைமை. 

இவற்றுக்கு அப்பால், நாடு சில நாட்களுக்கு முடக்கப்படுகிறது. சிலவேளை யூலை இறுதிவரை இது தொடர்ந்து முடங்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. 

முடங்குவது என்பது இயற்கையின் தொழிற்பாடு. முடக்குவது என்பது இயலாமையின் வெளிப்பாடு. இலங்கை முடங்குகிறதா? முடக்கப்படுகிறதா? பஞ்சத்துக்கும் பட்டினிக்கும் இடையில் செத்து மடியப் போகும் மக்களே இதன் அறுவடை. 

No comments