இலங்கையில் கோட்டா : முப்படைத் தளபதிகளையும் சந்தித்தார்!


இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்னும் நாட்டில் இருப்பதாகவும், இன்று காலை முப்படைத் தளபதிகளை சந்தித்துள்ளார் என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜூலை 9 ஜனாதிபதி மாளிகை முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து இலங்கையின் கடல் எல்லைக்குள் கடற்படைக் கப்பலில் இருந்த கோட்டாபாய ராஜபக்ச, இன்று மீண்டும் தரையிறங்கி, முப்படைத் தளபதிகள் மற்றும் தளபதிகளைக் காலையில் சந்தித்தார். இவர் திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் தங்கியிருப்பதாகச் செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.

நாளை மறுதினம் பதவி விலகும் கோட்டாபாய ராஜபக்ச இந்த வார இறுதியில் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடு செல்வார் எனத் தெரியவருகிறது.

இதேநேரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியதாக பிபிசி உலக சேவையிடம் தவறாக கூறியதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சர்வதேச செய்திச் சேவையான ஏஎன்ஐ உடனான தொலைபேசி உரையாடலில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், அவர் அண்டைய நாடொன்றில் இருப்பதாகவும், அவர் புதன்கிழமைக்குள் நாட்டுக்கு திரும்புவார் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று பிபிசியிடம் தெரிவித்தார்.

திருகோணமலை கடற்படை முகாமில் ஜனாதிபதியுடன் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments