அரசியல் கட்சிகளைப் பிளவுபடுத்தும் ரணிலின் தந்திரோபாய நகர்வலையில் சுமந்திரனின் கூட்டமைப்பும் சிக்கியது - பனங்காட்டான்


இலங்கையில் இரண்டு பருவப்பெயர்ச்சிக் காற்றுகளே உண்டு. ஒன்று – வடகீழ் பருவப்பெயர்ச்ச்சிக் காற்று. மற்றது – தென்மேல் பருவப் பெயர்சிக்காற்று. இப்போது எந்தக் காற்று இலங்கையில் வீசுகிறது?

இலங்கை அரசியலில் தற்போதைய நிலைமாறுகாலம் என்பது இடைக்காலம், இடர்காலம் என பல்பரிமாணங்களில் பயணிக்கிறது.

தேசிய அரசுமில்லை, தனிக்கட்சி அரசுமில்லை, சர்வகட்சி அரசுமில்லை – பல கட்சிகளைப் பிளவுபடுத்தி பிரித்தெடுக்கும் ஆட்சிக்குழுவாக அரச கட்டமைப்பு மாற்றம் பெற்று வருகிறது.

கோதபாயவை ஆட்சியை விட்டு அகற்ற ஆரம்பித்த கோதா கோ ஹோம் போராட்டம் முதல் 100 நாட்களை முடிப்பதற்குள் ராஜபக்சக்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாக உயர் பதவிகளிலிருந்து ஓடவைத்து விட்டது.

இது நிரந்தரமானதல்ல, தற்காலிகமானது என்று ஒரு தரப்புக் கூறி வந்தாலும், அடுத்து இரண்டரை ஆண்டுகளுக்கு ரணில் விக்கிரமசிங்கவே 

ஜனாதிபதியாக இருப்பார் என்றவாறு காய்கள் நகர்த்தப்படுகின்றன.

மக்கள் போராட்டத்தை ஆதரிப்பதாகக் கூறி வரும் ரணில், இப்போது அதன் இலக்கு என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளதுடன், சரியான இலக்குடன் போராட்டம் நடைபெற தான் எதிர்ப்பில்லை என்று கூறுவது இவரது இடைக்கால ஆட்சித் தந்திரம்.

ஷஷபுதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவை நிரந்தரமானதல்ல. மேலும் 12 பேரை அமைச்சர்களாக நியமிக்கும்வரை இது தற்காலிக அமைச்சரவை. மேலும் 40 வரையான ராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில், பல அரசியல் கட்சிகளும் இணைக்கப்படும். நாட்டின் நலனுக்காக அனைவரையும் அரசியல் பேதமின்றி அழைக்கிறேன்|| என்ற ரணிலின் பகிரங்க வேண்டுகோள், இலங்கையில் ஜனநாயகம் மலர்ந்துள்ளது என்று காட்டும் விசித்திர முன்னெடுப்பு.

இவரது உண்மையான செயற்பாடும், நிலைப்பாடும், சகல அரசியல் கட்சிகளையும் சின்னாபின்னமாக்கி, எந்தக் கட்சியையும் பலமாக இயங்க முடியாமற் செய்து, தமது கதிரையை பலப்படுத்துவது. 

மறுபுறத்தில், கோத்தபாயவை சிங்கப்பூரில் கைது செய்ய வேண்டும், போர்க்குற்றத்திற்கான பொறுப்புக் கூறலுக்குள் புகுத்த வேண்டும் என்ற முன்னெடுப்புக்களும் தீவிரம் பெற்றுள்ளன. எனினும், சிங்கப்பூர் அரசாங்கம் அவருக்கு மேலும் இரண்டு வார தங்கிட விசா வழங்கியுள்ளது. இது மேலும் மேலும் நீடிக்கப்படலாம். கோதா போர்க்குற்றவாளியென நிரூபிக்கப்படாதவரை, அவர் மீது எந்த நாடும் கடும் போக்கை மேற்கொள்ள சாத்தியமில்லை.

கோதா விரைவில் நாடு திரும்ப உள்ளதாக சில தகவல்கள் வந்து போகிறது. அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனைப் பகிரங்கமாக அறிவித்துள்ளார். யதார்த்தநிலை நோக்கின் கோதா தமது நாட்டிற்குத் திரும்புவதில் எந்தத் தடையுமில்லை. அவர் இப்போது இலங்கைப் பிரஜாவுரிமையுடன் மட்டும் இருக்கிறார். அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு போராட்டக்காரர்கள் ஒருபோதும் கேட்கவுமில்லை. அவருக்குத் தெரிந்த மரணபயத்தால் அவர் தப்பியோட நேர்ந்தது என்று மட்டுமே கூறமுடியும்.

மற்றைய ராஜபக்சக்கள் அமைச்சுப் பதவிகளைத் துறந்துவிட்டு, நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றி வருவதை போராட்டக்காரர்கள் எதிர்க்கவில்லை. இந்த நிலையில் தமது ஜனாதிபதிப் பதவியைத் துறந்த கோதா அரசியலைவிட்டு விலகி சாதாரண பிரஜையாக இலங்கையில் வாழ முடியும். 

அவர் மீதான போர்க்குற்ற விசாரணைகளை சர்வதேச மட்டத்தில், ஜெனிவா மனித உரிமை பேரவையில் குறிவைத்து முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு தமிழர் தரப்பையே சார்ந்தது. புலம்பெயர் தமிழர் அமைப்புகள் ஜெனிவா அமர்வுக் காலங்களில் அறிகைகளுடனும், ஆர்ப்பாட்டங்களுடனும் புறப்படும். பின்னர் எல்லாமே பொசுங்கிப் போய்விடும். தாயகத்திலுள்ள தமிழர் தேசியக் கட்சிகளும் இதே நிலைதான்.

வரப்போகும் செப்ரெம்பர் மாத மனிதஉரிமைப் பேரவையின் அமர்வு முக்கியமான ஒன்று. ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தை இலங்கை ஆட்சி பீடங்கள் நிராகரித்து வந்துள்ளன. ஜெனிவா கூறிய சர்வதேச விசாரணைப் பொறிமுறையை இலங்கை அரசு முழுமையாக நிராகரித்து விட்டது.

அடுத்தடுத்து ஜெனிவா பல கட்ட நடவடிக்ககளை மேற்கொண்டும் அனைத்தும் தீர்மானங்களாகவே உள்ளன. செப்பரம்பர் மாத 51ஆவது அமர்வு இலங்கை விடயத்தில் இறுக்கமான கடும்போக்குத் தீர்மானத்தை நிறைவேற்றுமென மனித உரிமை ஆணையாளர் பச்சிலற் அம்மையார் அறிவித்திருந்தார்.

நாட்டில் புதிதாக ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி, மக்கள் எழுச்சிப் போராட்டம், ராஜபக்சக்களின் பதவி துறப்புகள், நிலைமாறுகால ஆட்சிமாற்றம், போராட்டங்களை நசுக்குவதற்கான அவசரகால ஊரடங்குப் பிரகடனங்கள் என்ற புதிய பரிமாணங்களின் விளைவை ஜெனிவா எந்தளவுக்கு வயப்படுத்தி மேல் எடுக்கும் என்பது தெரியவில்லை.

இலங்கை மீதான தீர்மானத்தை முன்னர் அமெரிக்கா கொண்டு வந்த போது, அதன் இணை அனுசரணையாகவிருந்த இலங்கை அரசு – அப்போதைய பிரதமரான ரணில் இப்போது ஜனாதிபதியாக உள்ளதால், மீண்டும் அதே போக்கில் இயங்குவாரென சொல்ல முடியாது. தமது பதவியேற்பின் ஒரு வாரத்துக்குள்ளேயே படையினரை ஏவி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்காக பல நாடுகளின் கண்டனத்துக்குள்ளாகி இருக்கும் வேளையில், ஜெனிவாவில் செம்ரெம்பர் மாதம் அவர் ஷபல்டி| அடிப்பாரென எதிர்பார்க்க இடமுண்டு. அவ்வேளை இவரையும் ஜெனிவா குற்றக்கூட்டுக்குள் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு வலிசுமக்கும் தமிழர்களையே சார்ந்தது.

கோதா மீதான குற்றச்சாட்டுக்களை உள்வாங்கி, சர்வதேசத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்கும் நிலைப்பாட்டையும், ரணில் எடுக்க மாட்டாரென்றே நம்பலாம். ராஜபக்சக்களின் பொதுஜன பெரமுனவின் ஆதரவின்றி இவரால் தமது தற்போதைய கதிரையைத் தக்கவைக்க முடியாது.

ஜனாதிபதித் தேர்தலில் இலகுவாக வெற்றி பெற்ற ரணில் இந்த வாரம் அவசரகால சட்டத்தை நிறைவேற்றுவதிலும் வெற்றிபெற்று தம்மை அரசியல் பலசாலியாக உலக அரங்கிற்குக் காட்டி உள்ளார். இதுதான் அவருக்குக் கிடைத்த பிளஸ் பொயின்ட்.

இதனூடாக நாடாளுமன்றத்தின் சகல கட்சிகளையும் லாவகமாக இவர் பிளந்துள்ளதையும், பிரித்துக் கொண்டிருப்பதையும் காணலாம். பொதுஜன பெரமுனவின் அக்கிராசனரான ஜி.எல்.பீரிஸ் கட்சியின் முக்கியத்துவரான டளஸ் அழகப்பெரும ஆகியோர் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் கட்சிக்குள் நெருக்கடியைச் சந்திக்கின்றனர். பிரீஸ் அமைச்சர் பதவியை இழந்துள்ளார். டளஸ் அழகப்பெரும புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கி வருகிறார்.

சஜித் பிரமதாசவின் மக்கள் சக்தியைத் சேர்ந்த ஹரின் பெர்னான்டோவும், மனு~ நாணயக்காரவும் இப்போது ரணிலுடன் இணைந்து மீண்டும் அமைச்சர்களாகி உள்ளனர். மேலும் சுமார் பத்துப் பேர் சஜித் அணியிலிருந்து பிரிந்து ரணில் பக்கம் பாய உள்ளதாக செய்திகள் வருகின்றன.

இந்த நெருக்கடியைத் தடுத்து தனது அணி உடைந்து சிதறுவதைக் காப்பாற்ற புதிய சர்வகட்சி அரசில் பிரதமர் பதவியை ஏற்க சஜித் பிரமதாச முன்வந்துள்ளார். ஆயினும் ஜனாதிபதி ரணில் அதனை நிராகரித்து விட்டார். எதிரணியைச் சின்னாபின்னமாக்கி சஜித்தை கோ ஹோம் ஆக்குவதே ரணிலின் இப்போதையை நோக்கம்.

ராஜபக்சக்கள் மறைநிலையில் நின்று ஆட்சி நிர்வாகத்தை நடத்த, சஜித்தை முழுமையான அரசியல் நிர்வாணமாக்க ரணில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பகிரங்கமானவை.

இதுபோன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் உள்ளகத்தில் பிளவு நிலைக்குள் சென்றுள்ளது. ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பின் போது இரண்டு கூட்மைப்பின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுக்கு வாக்களித்ததை ஹரின் பெர்னான்டோ அம்பலப்படுத்தி இருந்தார். பெயர்களை அவர் குறிப்பிடாவிட்டாலும், அவர்கள் யார் யார் என்பது சம்பந்தனுக்கும், சுமந்திரனுக்கும் தெரியும். வாக்களிப்பின் போது தமது வாக்குச்சீட்டை கைத்தொலைபேசியில் படமெடுக்க முனைந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரின் கைத்தொலைபேசியை நாடாளுமன்ற அலுவலர்கள் பறித்தெடுத்தனர். சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தாம் ரணிலுக்கு வாக்களித்ததை அவருக்குக் காட்டி நிரூபிப்பதற்காக படமெடுக்க முனைந்தார் என்பது ரகசியமன்று. 

ரணிலுக்கு எதிராக டளஸ் அழக்பெருமவை போட்டியிட நிறுத்திய பின்னணியில் சீனத் தரப்பு இருந்ததும், இதற்கு இணைவாக சுமந்திரனும், சாணக்கியனும் சீனத் தூதுவரை நேரில் சென்று சந்தித்தது உரையாடியதும்கூட ரகசியமன்று. இது தொடர்பான நிறைய தகவல்கள் சேகரிப்பில் உண்டு. அவசியமேற்படும் போது அவைகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.

கோதபாய அரச தரப்பிலிருந்து முதலில் வெளியேறி நெருக்கடி உருவாக்கியவர்கள் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகிய மூவருமே. இவர்கள் ஒரு குழுவாக கோதாவுக்கு எதிர்ப்புக் காட்டுவதில் ஒற்றுமையாக இருந்தனர். இந்த வாரம் இடம்பெற்ற அவசரகாலப் பிரகடன வாக்கெடுப்பு இவர்களுக்குள்ளும் பிளவை ஏற்படுத்தியுள்ளது. விமல் வீரவன்ச இதில் ஆதரித்து வாக்களிக்க, உதய கம்மன்பல அணியினர் வாக்களிப்பை பகி~;கரித்தனர். அதே போன்று, மைத்திரிபால சிரிசேன தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. அது தவிர 41 உறுப்பினர்கள் அவ்வேளை நாடாளுமன்றத்தில் இருக்கவில்லை.

இந்த நிகழ்வை ரணிலின் சூட்சுமமான தந்தோரபாயத்தின் வெளிப்பாடு எனலாம். தமது தந்தை எஸ்மன்ட் விக்கிரமசிங்க இலங்கையில் அரசாங்கங்களை உருவாக்குவதிலும், வீழ்த்துவதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய வகிபாகத்தை, ரணில் 45 வருடங்கள் காத்திருந்து தமது இலக்கை நோக்கி செஸ் விளையாடுவது போல கையாளுகிறார்.

இதற்கு உதாரணமாக இரண்டு அரசியல்வாதிகளின் அறிவிப்புகளைப் பார்க்க முடிகிறது. 

''வருவோரெல்லோரையும் வீட்டுக்குப் போ என்றால் யாரைக் கொண்டு வர காலிமுகக்காரர்கள் போராடுகிறார்கள்? எவர் என்ன செய்தாலும் அடுத்த இரண்டரை வருடங்களுக்கு ரணில்தான் ஜனாதிபதி'' என்று கூறியுள்ளார் விமல் வீரவன்ச.

''போராட்டத்தின் மூலம் ரணிலே அதிக பயன் பெற்றுள்ளார்.  போராட்டம் நடந்திருக்காவிட்டால் ரணில் ஜனாதிபதியாக வந்திருக்கமாட்டார்'' என்று கூறியுள்ளார் கூட்டமைப்பின் சுதந்திரன்.

இலங்கையில் இரண்டு பருவப்பெயர்ச்சிக் காற்றுகளே உண்டு. ஒன்று – வடகீழ் பருவப்பெயர்ச்சிக் காற்று. மற்றது – தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்று. இப்போது எந்தக் காற்று இலங்கையில் வீசுகிறது?

No comments