ஈராக் நாடாளுமன்றம் உடைப்பு: நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து மக்கள் போராட்டம்!


ஈராக் தலைநகர் பாக்தாத்தில், இந்த வாரத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக இன்று, நூற்றுக்கணக்கான மக்கள் மீண்டும் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர்.

ஷியா தலைவர் முக்தாதா அல்-சதாருக்கு ஆதரவாக ஈராக் பாராளுமன்றத்தை மீண்டும் எதிர்ப்பாளர்கள் உடைத்து நுழைந்துள்ளனர்.

குறைந்தது 125 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் அரசியல் மோதலை அதிகரித்துள்ளது.

எதிர்ப்பாளர்கள் சட்டமன்ற அமைப்பை முற்றுகையிட்டு புதிய பிரதமரை பரிந்துரைப்பதற்கான அமர்வை இடைநிறுத்திய சில நாட்களுக்குப் பின் இன்று சனிக்கிழமை குறித்து முற்றுகைப் போராட்டம் நடந்துள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டு ஷியா தலைவர் முக்தாதா அல்-சதர் ஆதரவாளர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரானுக்கு ஆதரவாக செயல்படும் புதிய பிரதமர் தலைமையிலான அரசு அமைவதை கண்டித்து அவர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர்.

ஷியா தலைவர் முக்தாதா அல்-சதர் தலைமையில் அரசு அமைந்திட விடாமல், எதிர்க்கட்சிகள் ஒரு கூட்டணியை உருவாக்கி பெரும்பான்மையை நிரூபித்து ஈராக் பிரதமர் பதவிக்கு முகமது அல்-சூடானி நியமிக்கப்பட்டதை எதிர்த்து இந்த போராட்டம் நடைபெற்றது.

ஏனெனில் பிரதமர் வேட்பாளராக உள்ள முகமது ஈரானுக்கு மிகவும் நெருக்கமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று முகமது அல்-சூடானி தலைமையில் புதிய அரசு அமைவதை தடுக்கவே நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்தி வருவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இன்றைய போராட்டத்தில் 125 பேர் காயமடைந்துள்ளனர். குறிப்பாக 100 பொதுமக்களும் 25 பாதுகாப்புப் படை உறுப்பினர்களும் காயமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் கற்களை வீசினர். அதேநேரம் காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.

No comments