யாழில் ஈருறுளி விழிப்புணர்வு பயணத்திற்கு அழைப்பு


யாழ் ஆரோக்கிய நகரத் திட்டத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள "ஆரோக்கியத்தின் பாதையில்" என்ற விழிப்புணர்வு ஈருறுளிப் பயணம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி, திங்கட்கிழமை காலை 7 மணிக்கு இடம்பெறவுள்ளது. 

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இருந்து ஆரம்பிக்கவுள்ள இந்த ஈருறுளிப் பயணம் அங்கிருந்து ஆடியபாதம் வீதி வழியாக கொக்குவில் சந்தியை அடைந்து, அங்கிருந்து கே.கே.எஸ் வீதி வழியாக ஆஸ்பத்திரி வீதியை அடைந்து, அவ் வீதி வழியாக வேம்படிச் சந்தியை வந்தடையும். அங்கிருந்து பலாலி வீதி ஊடாகப் பரமேஸ்வராச் சந்தியை அடைந்து, யாழ்ப்பாணப் பல்கலைக் கழக பிரதான வளாகத்தின் நுழைவாயிலில் நிறைவடையவுள்ளது. 

அண்ணளவாக 10 கிலோ மீற்றர் தூரமுள்ள இந்த விழிப்புணர்வு ஈருறுளிப் பேரணியில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் இ. சுரேந்திரகுமாரன், யாழ். மாநகர முதல்வர், சட்டத்தரணி வி. மணிவண்ணன், ஆணையாளர் இ.த. ஜெயசீலன், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன், யாழ். போதனா வைத்திசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன், யாழ்பாண பிரதேச செயலாளர் சா. சுதர்சன், நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி எழிலரசி அன்ரன் யோகநாயகம் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்குபற்றலுடன், பல்கலைக் கழகப் பணியாளர்கள், மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் உட்படப் பெருமளவானோர் கலந்து கொள்ளவுள்ளனர். 

பொதுமக்களிடையே சுகநலனில் அக்கறை கொள்ளலில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும்  “யாழ் ஆரோக்கிய நகரம்” என்ற செயற்திட்டத்தின் கீழ் இந்த விழிப்புணர்வு ஈருறுளிப் பயணம்  மேற்கொள்ளப்படவுள்ளது.  ஆர்வமுள்ள அனைவரையும் இந் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். 

உலக நாடுகள் பலவற்றில் உலக வங்கி “ஆரோக்கிய நகரங்கள்” என்ற எண்ணக்கருவை நடைமுறைப்படுத்தி கணிசமான ஆரோக்கிய நகரங்களை அடையாளப்படுத்தியும் உள்ளது. அந்த அடிப்படையில் தென் ஆசியாவிலேயே முதன் முறையாக யாழ்ப்பாண நகரம் தெரிவு செய்யப்பட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தின், சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத் துறையின் நேரடி ஒருங்கிணைப்பு  மற்றும் நடைமுறைப்படுத்தலில் உலக சுகாதார ஸ்தாபனம் , யாழ். மாநகர சபை, யுனிசெப், சுகாதார சேவைகள் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை, கல்வி அமைச்சு , அரச - அரச சார்பற்ற  நிறுவனங்கள் , யாழ். மாவட்ட  அரசாங்க அதிபர்,  யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் இத்திட்டத்தின் பங்காளிகளாகத் தமது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments