பற்றி எரிகிறது ரணிலின் வீடு! கண்டிக்கிறார் சுமந்திரன்!


கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ரணில் விக்கிரசிங்கவின் வீட்டுக்கு தீ போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து, சிறிது நேரத்திற்கு முன்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழு ஒன்று அவரது வீட்டிற்குள் நுழைந்து வீட்டுக்குத் தீ வைத்தனர்.

பல பத்திரிகையாளர்களும் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்டனர், அதைத் தொடர்ந்து அப்பகுதியில் மேலும் போராட்டக்காரர்கள் கூடினர்.

போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போதிலும், அவர்கள் அவரது வீட்டிற்குள் நுழைந்து வீட்டிற்கு தீ வைத்தனர்.

இதற்கிடையில், கொழும்பில் உள்ள பிரதமரின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைக்கப்பட்டதாகவும், அமைதியின்மை காரணமாக அதன் குழுவினரால் அந்த இடத்திற்குச் செல்ல முடியவில்லை என்றும் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் (CMC) தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேநேரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தை எரித்தமையை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், முதலாவது ஆளாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

வன்முறை எதற்கும் தீர்வாகாது என்றும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். பிரதமர் பதவிக்கு வந்ததில் இருந்து அவருடன் கருத்து வேறுபாடுகள் உள்ள போதும் இச்சம்பவத்தை மன்னிக்க முடியாது என்றும் தயவு செய்து இப்போது வன்முறையை நிறுத்துங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தை எரித்தமை உட்பட அனைத்து சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்ட செயல்களுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று கண்டனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான நடத்தை இலங்கையின் பொருளாதாரத்தையும் அதன் மக்களையும் பாதிக்கும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது. 

வன்முறைச் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் மற்றவர்கள் இந்த கொடூரமான செயல்களைச் செய்ய அனுமதிக்க வேண்டாம் என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மக்களை கேட்டுக்கொள்கிறது.

தீ வைப்பது மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது அமைதியான போராட்டத்தின் நோக்கத்தை தோற்கடிக்கும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


No comments