துணை ஜனாதிபதிக்கு பெயர்கள் பரிந்துரை!


ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நாளை பதவி விலகுவதாக சபாநாயகருக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் பதில் ஜனாதிபதி பதவிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபை முதல்வர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ், முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும,43ஆவது படையணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் யோசனைக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ சர்வக்கட்சி அரசாங்கத்தில் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்காமல் சகல தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவரை பிரதமராக நியமித்திருந்தால் தற்போதைய நிலை தோற்றம் பெற்றிருக்காது என பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் கடும் அதிருப்தியையும், ஜனாதிபதியின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி பதவி வெற்றிடமானதை தொடர்ந்து அரசியலமைப்பின் பிரகாரம் ஒருவார காலத்திற்குள் பதில் ஜனாதிபதியாக பிரதமர் அல்லது சபாநாயகர் நியமிக்கப்பட்டு 30 நாட்களுக்குள் பாராளுமன்றத்தின் வாக்கெடுப்பின் ஊடாக இடைக்கால ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நாளை பதவி விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் பிரதமர் பதவி குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும, 43 ஆவது படையணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஆகியோரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் பிரதமர் பதவிக்கு மக்கள் விடுதலை முன்னணியின் அனுர குமார திஸாநாயக்கவின் பெயரை பரிந்துரைத்துள்ளதுடன்,தற்போதைய நிலையில் பொதுஜன பெரமுன எதிர்க்கட்சியாக செயற்படுவது சிறந்ததாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

பிரதமர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ,முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும ஆகியோரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரதான கட்சிகளுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  நுகேகொட பகுதியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரலவின் இல்லத்தில் ஆளும் மற்றும் எதிர்தரப்பினர் இவ்வாறு பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளனர்.

No comments