கோட்டபாயவுக்கு அடைக்கலம் வழங்க வேண்டாம்!

தற்போதைய தென்னிலங்கை அரசியல் குழப்பங்களிற்கு மத்தியில் அரசியல் தீர்வு வரும் வரை தமிழ் மக்களுக்கு ஒரு இடைக்கால நிர்வாகம் உருவாகுவதற்கு வழி செய்ய வடக்கு ,கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் இணைப்பாளர்கள் சர்வதேச சமூகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது சர்வதேச சமூகத்திடம் அவர்கள் கோரிக்கையினை முன்வைத்திருந்தனர்.

மக்கள் போராட்டத்திற்குப் பயந்து இன அழிப்பு மற்றும் போர்க்குற்றவாளியான ஜனாதிபதி இலங்கை கோத்தபாயராஜபக்ச இலங்கையிலிருந்து தப்பியோடியுள்ளார்.

குறிப்பாக இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ஒரு இன அழிப்பு படுகொலையாளி , போர்க்குற்றவாளி என்பதை பிரகடனப்படுத்துங்கள் .ஜனாதிபதி கோட்டபாயாவிற்கு எந்த ஒரு நாடும் அடைக்கலம் கொடுக்கக் கூடாது . தங்கள் நாட்டிற்கு அவர் வருகைதரின் அவரைக் கைதுசெய்து குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துங்கள் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாம் 1971 நாட்களுக்கு மேலாக எங்கள் உறவுகளைத் தேடி போராடி வருகின்றோம் . எங்களுடன் இணைந்து போராட்டம் நடாத்திய காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோரில் இதுவரை 138 மரணமடைந்திருக்கின்றனர் .

எங்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தாங்களாகவே படையினரிடம் ஒப்படைத்திருந்தனர்.அவர்களின் கதி என்ன என்பது தொடர்பாக இதுவரை எங்களுக்கு பதிலளிக்கப்படவில்லை.

தற்போதைய சூழலில் ஜனாதிபதி கோட்டபாயவிற்கும் ஏனைய ராஜபக்சாக்களுக்கும் சர்வதேச ரீதியாக இருக்கும் சர்வதேச சொத்துக்களை முடக்கி அவற்றை பாதிக்கப்பட்ட மக்கள் பெற்றுக்கொள்ள வழி செய்யுங்கள் .

ஜனாதிபதி கோட்டபாயவும் , அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சவும் போரின்போதும் , போரின் பின்னரும் வன்னியில் உள்ள தமிழ் மக்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்துள்ளனர் . வங்கிகளில் இருந்த பணத்தையும் , கொள்ளையடித்துள்ளனர் . அந்தச் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து மக்கள் அதனைப் பெற்றுக்கொள்ள வழி செய்யுங்கள்.

ஐரோப்பிய நாடுகளின் நீதிமன்றங்கள் பலவற்றிற்கு மனித குலத்திற்கு எதிராக குற்றம் செய்தவர்கள் தங்கள் நாட்டிற்கு வந்தால் அவர்களைக் கைதுசெய்து விசாரணை செய்யும் அதிகாரம் உண்டு . எனவே ஐரோப்பிய நாடுகளுக்கு ஜனாதிபதி கோட்டபாயவும் , ஏனைய ராஜபக்சாக்களும் வருகை தந்தால் அவர்களை கைது செய்து தங்கள் தங்கள் நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்துங்கள். போரின் பின்னர் தமிழர் ஆக்கிரமிப்புக்கள் சிறீலங்கா தாயகத்தில் பச்சை ஆட்சியாளர்களினால் அவற்றை உடனடியாக தடுத்து நிறுத்துங்கள்.

அரசியல் தீர்மானம் ஒன்றின் மூலம் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வதற்கு அழுத்தம் கொடுங்கள் . படையினரால் பறிக்கப்பட்ட காணிகளை மக்கள் மீளப் பெறுவதற்கு வழிசெய்யுங்கள்

தேசம் , இறைமை , சுயநிர்ணயம் என்ற கொள்கைகளின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உருவாவதற்கு வழி செய்யுங்கள் .

அரசியல் தீர்வு வரும் வரை தமிழ் மக்களுக்கு ஒரு இடைக்கால நிர்வாகம் உருவாகுவதற்கு வழி செய்யுங்கள் என தெரிவித்துள்ளனர்.



No comments