இலங்கைக்கு 50 மில்லியன் டாலர்கள் நிதியுதவி வழங்கும் ஆஸ்திரேலியா


ஆஸ்திரேலியாவை நோக்கி செல்லும் இலங்கை படகுகள்: இலங்கைக்கு 50 மில்லியன் டாலர்கள் நிதியுதவி வழங்கும் ஆஸ்திரேலியா

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அந்நாட்டுக்கு நிதியுதவியாக 50 மில்லியன் டாலர்கள் வழங்கப்படும் என ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வாங் அறிவித்திருக்கிறார். 

இது தொடர்பாக ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நிதியுதவி லட்சக்கணக்கான இலங்கையர்களின் தினசரி உணவு மற்றும் மருத்துவத் தேவைகளுக்கு உதவியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். 

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடையும் இலங்கையர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதை கட்டுப்படுத்துவதற்காக ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளாரி ஓ’நீல் இலங்கைக்குப் பயணமாகியுள்ளார். இந்த சூழலில், பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான நிதியுதவியை இலங்கைக்கு வழங்குவதாக ஆஸ்திரேலியா அறிவித்திருக்கிறது. 

"இலங்கையில் உள்ள 30 லட்சம் மக்களின் அன்றாட ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் வகையில் அவசர கால உணவு உதவிக்காக உலக உணவுத் திட்டத்திற்கு உடனடியாக 22 மில்லியன் டாலர்களை வழங்கவுள்ளோம்" என ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். 

“2022-23 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வளர்ச்சிக்கான நிதியுதவியாக 23 மில்லியன் டாலர்களை ஆஸ்திரேலியா வழங்கும். இது சுகாதார சேவைகள் மற்றும் பொருளாதார மீட்புக்கு உதவியாக இருக்கும்,” என அவர் தெரிவித்திருக்கிறார். 

அண்மையில், இலங்கைக்காக ஐ.நா. முகமைகளிடம் 5 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த பொருளாதார உதவிகள் செய்யப்படுவதாக ஆஸ்திரேலிய தரப்பு தெரிவித்துள்ளது. 

சுமார் இரண்டு ஆண்டுகளாக இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவில் எந்த படகும் தஞ்சமடையாத நிலையில், கடந்த மே 21ம் தேதி முதல் பல இலங்கை படகுகள் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருக்கின்றன. இப்படகுகளில் வந்தவர்கள் மீண்டும் இலங்கைக்கே நாடுகடத்தப்பட்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments