1987 யூனில் வான் வழியாக மனிதநேயம்! 2022 யூனில் கடல் வழியாக மனிதாபிமானம்! ஏதாவது புரிகிறதா? பனங்காட்டான்


1987 யூன் மாதத்தில் மனிதநேயம் என்ற பெயரில் இந்தியா வான் வழியாக தமிழர் தாயகத்தில் உணவுப் பொட்டலங்களை வீசியது. 35 ஆண்டுகளின் பின்னர் அதே யூன் மாதத்தில் மனிதாபிமானம் என்ற பெயரில் முழு இலங்கைக்கும் கடல் வழியாக உணவுப் பொருட்களை இந்தியா அனுப்புகிறது. ஏதாவது புரிகிறதா?

இலங்கையின் இன்றைய மோசமான அரசியல் போக்கையும் எதிர்பாராத நகர்வுகளையும் போன்று வேறு எந்த நாட்டிலாவது இடம்பெறுகிறதா என்று கேட்டால், தயக்கமின்றி இல்லையென்று பதில் கூறலாம். 

அரசியல் அறிவற்ற, இராணுவ செயற்பாடுகள் மட்டுமே தெரிந்தவர் ஜனாதிபதியாக உள்ளார். பொதுஜன பெரமுன வேட்பாளராக இவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருந்தாலும், எந்தவொரு அரசியல் கட்சியிலும் இதுவரை கோதபாய உறுப்பினரல்லர். 

இலங்கையின் எழுபத்தைந்து வருட அரசியல் வரலாற்றில் இவ்வாறான ஒருவர் அதன் தலைவரானது இதுவே முதன்முறை - அதுவும் நிறைவேற்று அதிகாரங்களுடன்.

இதற்கு மாறாக நாற்பத்தைந்து வருட கால அரசியலில் நீந்திச் சுழியோடி, ராணுவ நடவடிக்கைகளுக்குட்பட்ட அரசாங்கங்களில் பிரதமராகவும் அமைச்சராகவும் அனுபவம் பெற்றவர் இப்போது பிரதமராகியுள்ளார். இதிலுள்ள முக்கியம் என்னவெனில், ரணில் விக்கிரமசிங்க கடந்த தேர்தலில் முழுமையாகத் தோல்வியடைந்த கட்சியின் தலைவர். அத்துடன் இவரும் தோல்வி கண்டவர். இறுதியில் தேசியப்பட்டியலூடாக எம்.பியாகி இன்று பிரதமராகியுள்ளார். 

கோதா - ரணில் ஷசம்பந்தத்தை|, பதிவுத் திருமணமாகப் பார்க்க முடியாது. மோதிரம் மாற்றிய திருமணமும் இல்லை. மேற்குலக வாழ்வு முறையிலுள்ள ஷகூடி வாழுவோம்| (டுiஎiபெ வழபநவாநச) மட்டுமே. எப்போதும் பிரிந்து செல்லும் உரிமை இருவருக்கும் உண்டு. இதில் யார் முந்துவார் என்பதுதான் தற்போது பலரிடமும் உள்ள கேள்வி. 

கோதாவும் ரணிலும் நெருக்கடியான சந்தர்ப்பத்தை தங்கள் எதிர்காலத்துக்காக நன்றாகப் பயன்படுத்துகிறார்கள். உதாரணத்துக்கு முக்கியமான ஒன்றைக் குறிப்பிடலாம். 

கோதா வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று தொடரும் போராட்டத்தை மெதுமெதுவாக மழுங்கடிக்க ரணில் தேவைப்படுகிறார். பௌத்த மகாசங்கங்கள் கேட்ட சர்வகட்சி அரசாங்கம் இதுதான் என்று காட்டுவதற்கு சில மாற்றுக் கட்சி எம்.பிக்கள் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர். நிமால் சிறிபால டி சில்வா, மகிந்த அமரவீர, ஹரின் பெர்னான்டோ, மனு~ நாணயக்கார ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். கோதாவுடன் முன்னர் முரண்பட்டு அமைச்சர் பதவி இழந்த விஜேதாச ராஜபக்ச, அலி சப்றியின் இடத்துக்கு நீதி அமைச்சராகியுள்ளார். சஜித் அணியிலிருந்த சம்பிக்க ரணவக்க சுயாதீன எம்.பியாகியுள்ளார். 

இந்த அதிரடிகள் கோதாவுக்குக் கிடைத்த வெற்றியாக நோக்கப்படுகிறது. தனது இரத்த உறவுகளை அகற்றிவிட்டு மாற்றான் தோட்டத்து மல்லிகைகளை முற்றத்தில் நிறுத்தியதால் கோதா கோ கம சற்று ஓய்வெடுக்கிறது. இது இடைக்கால ஓய்வு மட்டும்தான்.

ரணிலைப் பொறுத்தளவில், தம்மை அரசியலில் பூச்சியமாக்கிய சஜித் பிரேமதாசவை அரசியல் அரங்கிலிருந்து அடித்து வீழ்த்தி, வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்பதே மூலத்திட்டம். அப்படிச் செய்வதன் மூலம் சஜித்துடன் அள்ளுப்பட்டுச் சென்ற முன்னாள் ஐக்கிய தேசிய கட்சியினரை மீண்டும் தம்பக்கம் இழுக்கலாம் என்பது இலக்கு. 

இதனை ரணில் கச்சிதமாகச் செய்கிறார். இன்றைய அரசியல் சதுரங்கத்தில் இறுதியில் வெல்லப் போவது கோதாவா ரணிலா என்பதை பூவா தலையா போட்டுப் பார்க்க முடியாது. இரண்டில் ஒரு ஷதலை| தடுமாறும் போதுதான் அதனைக் கண்டுகொள்ள முடியும். 

மேற்குலகின் செல்லப்பிள்ளையான ரணிலின் முகத்தை முன்னால் நிறுத்தி சர்வதேசத்திலிருந்து  பெற வேண்டியவைகளைப் பெற்று, ஒருவாறு தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்யும்வரை அட்டமத்துச் சனி ரணிலை அண்டாது. 

ரணிலை விரும்பும் இந்தியா எரிபொருளை அள்ளி அள்ளிக் கொடுக்கிறது. முன்னைய கடன் திட்டத்திலான கடைசி எரிபொருள் கப்பல் கொழும்பு சென்றுள்ளது. 

மேலும் எரிபொருளை இந்தியாவிலிருந்து பெற ஐம்பது கோடி ரூபாவை கடனாகக் கொடுக்க (ரணிலை நம்பி) மோடி அரசு இணங்கியுள்ளது. உக்ரைன் யுத்தம் காரணமாக மேற்குலகால் ஓரங்கட்டப்படும் ரஸ்யாவிடமிருந்து பெறப்படும் எரிபொருளின் ஒரு பகுதிதான் இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்படுகிறது என்பது எவருக்கும் தெரியாததல்ல. இதனை அமெரிக்காவோ பிரித்தானியாவோ தெரிpந்தது போலக் காட்டிக் கொள்ளாது இருப்பதும் ஒருவகை அரசியல்தான். 

ரணிலின் நெருங்கிய தொடர்பிலுள்ள சர்வதேச நாணய வங்கி கடன் கொடுக்க இணங்கியுள்ளது. வழமையான நிபந்தனைகளை அது முன்வைக்க கோதாவும் அதற்குச் சம்மதித்ததால், அரசாங்க ஊழியரின் வேலை கிழமைக்கு நான்கு நாட்களாகிவிட்டது. வெள்ளிக்கிழமை வீட்டுத் தோட்டமாம். பாடசாலைகளுக்கும் வெள்ளியன்று விசேட விடுமுறை. 

பேருந்து - ரயில் சேவைகள் திடுதிப்பென நிறுத்தப்படுகின்றன. கோதுமை மா இன்மையால் வெதுப்பகங்கள் மூடப்படுகின்றன. எரிபொருள் இல்லை, எரிவாயு இல்லை. விவசாயத்துக்கு உரம் இல்லை. அரிசி - காய்கறிகளின் விலை விண்நோக்கி எகிறுகிறது. அடுத்த மூன்று வருடங்களுக்கு மின்வெட்டு தொடருமென அபாய அறிவிப்பு. எரிபொருள் இன்மையால் மீன்பிடியும் முடக்கம். எது இருக்கிறது என்று கேட்டால் அதுவும் இல்லையென்பதே பதிலாகிறது. 

அரசாங்க ஊழியர்களை வேலையிலிருந்து நிறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதால் அவர்கள் ஐந்து வருடம் வெளிநாடுகளுக்குச் சென்று பணியாற்ற சம்பளமற்ற லீவு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது. இதற்காக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தால் வாரக்கணக்கில் காத்திருக்கும் நிலை. 

முப்பதாண்டு உள்நாட்டு யுத்த வேளையில் அரச பயங்கரவாதத்தால் பல்லாயிரம் தமிழர் நாட்டைவிட்டு வெளியேறினர். இன்று, அரச இயந்திர ஊழலாலும் தங்கள் எதிர்கால வாழ்வின் நம்பிக்கையின்மையாலும் கோதாவின் அறுபத்தொன்பது லட்சம் மக்களில் பலரும் நாட்டை விட்டு ஓட ஆரம்பித்துள்ளனர். 

சரியான தருணம் பார்த்திருந்த அமெரிக்கா உதவிக்கரம் நீட்டுகிறது. இதுவும் ரணிலின் முகத்துக்காக என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. 

கோதபாய - மகிந்த நிர்வாகத்தில் அமெரிக்காவின் எம்.சி.சி. உடன்படிக்கை நிராகரிக்கப்பட்டது. கிடைத்திருக்க வேண்டிய நானூறு மில்லியன் நன்கொடையை இலங்கை இழந்ததாக அமெரிக்கா அறிவித்தது. 

இலங்கையில் நாற்பத்தொன்பது லட்சம் மக்களுக்கு உணவுத்தேவை உள்ளதென கொழும்பிலுள்ள ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் அறிவிப்பு விடுக்க, மறுபுறத்தில் அமெரிக்கா இலங்கைக்கு ஆறு மில்லியன் டாலரை வழங்க முன்வந்திருப்பதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவர் யூலி சங் அறிவிக்கிறார். இது, நிச்சயம் ரணிலின் மவுசை மேலெழுப்பும். 

இந்தச் செயற்பாடுகளுடன் ஒத்ததாக இந்தியாவின் நகர்வுகளை கூர்ந்து பார்க்க வேண்டும். பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரும் கோடீஸ்வர வணிகப் பிரமுகருமான அதானியிடம் (இருவரும் குஜராத் மாநிலக்காரர்கள்) மன்னார் காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடி நேரடியாக கோதபாயவிடம் இதனைக் கேட்டதாகவும், இந்த விருப்பத்தை கோதபாய தம்மிடம் தெரிவித்ததாகவும், அதன் அடிப்படையிலேயே அதானிக்கு இது வழங்கப்பட்டதாகவும் இலங்கை மின்சார சபைத் தலைவர் பெர்னான்டோ கோப் குழுவின் முன்னால் வாக்குமூலமளித்தார். மறுகணமே இதனை மறுத்து தமது ருவிட்டரில் கோதபாய பதிவிட்டார். இறுதியில் மின்சார சபைத் தலைவர் பதவியிழந்தார். 

ஒரு ஜனாதிபதி ருவிட்டர் மூலம் பதிலளிக்கும் தரத்துக்கு இறங்கியுள்ளதை என்னென்று சொல்வது. இந்த இருவரில் யார் பொய்யர்? மின்சார சபைத் தலைவர் பொய் சொல்லவில்லையென்றால் அவரைப் பதவி விலகுமாறு ஏன் கூற வேண்டும்? உண்மையைச் சொன்னதால்தான் அவரின் ராஜினாமா ஜனாதிபதியால் ஏற்கப்பட்டுள்ளது என்பது அம்பலமாகியுள்ளது. 

மோடியின் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைமைத் தளமான ஆர்.எஸ்.எஸ் இன் முக்கிய நிர்வாகி ராம் மாதவ் சில நாட்களுக்கு முன்னர் ரகசியமாக கொழும்பு சென்று ரணிலைச் சந்தித்து பேசியுள்ளார். மன்னார் காற்றாலையைப் பொறுப்பேற்றுள்ள அதானி தமது சொந்த உலங்கு வானூர்தியில் மன்னாருக்கு மேலாகப் பறந்து சென்று நகரை அளந்துள்ளார். 

இலங்கையில் என்ன நடைபெறுகிறது? இவைகளை உற்று நோக்கும்போது 1987 மீண்டும் ஞாபகம் வருகிறது.

1987 யூன் மாதம் நான்காம் திகதி தமிழர் தாயகத்தைக் காப்பாற்றும் (?) நோக்கில் இந்தியாவின் பத்து விமானங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் புகுந்து உணவுப் பொட்டலங்களை வீசின. அரிசி, வெட்டுப்பாண் துண்டுகள், சிறு போத்தலில் எண்ணெய், பூசணிக்காய் என்பவை இந்தப் பொட்டலத்துக்குள் இருந்தன. இது புதிய பாதை ஒன்றுக்கான ஆரம்பம். 

இன்று முப்பத்தைந்து ஆண்டுகளின் பின்னர், அதே யூன் மாதத்தில், கப்பல் வழியாக முழு இலங்கைக்குமென இந்தியா நிவாரணமாக உணவுப் பொருட்களை அனுப்பி வைக்கிறது. குட்டித் தீவின் அனைத்துப் பகுதிகளிலும் இவை விநியோகிக்கப்படுகின்றன. 

1987ல் தமிழர் தாயகத்தை இலக்கு வைத்து உணவு விநியோகம். 2022ல் முழு இலங்கையையும் நோக்கி உணவு விநியோகம். ஏதாவது புரிகிறதா?

No comments