மகிந்தவை கதிரையிலமர்த்த முயற்சி!



தற்போதும் நாட்டின் நாடாளுமன்றம் திருட்டு கும்பல் வசம் காணப்படுகின்றதாகவும், மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமர் ஆக்குவதற்கு அந்த திருடர் கூட்டம் தயாராகி வருவதாகவும் மக்கள் விடுதலை முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் மேலும் தெரிவிக்கையில், மஹிந்த ராஜபக்ஷ அலிபாபாவும் அவருடன் சேர்ந்து மக்களின் வரி பணங்களை சுரண்டிய திருடர்கள் மீண்டும் பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்சவை கொண்டுவருவதற்கு முயற்சி செய்து வருகிறார்கள்.

ஏனெனில் 21 ஆம் திருத்தம் மூலம் ஜனாதிபதியிடம் இருக்கின்ற அதிகாரங்களை நாடாளுமன்றத்துக்கு வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜனாதிபதியிடம் இருக்கின்ற அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்கு வழங்கும் போது பிரதமர் அதிகாரம் கொண்டவராக காணப்படுவார்.

தற்போதிருக்கும் ரணில் விக்ரமசிங்கவிடம் அதிகாரம் சென்றால் ராஜபக்ஷக்களை பாதுகாப்பார் இல்லாவிட்டால் அவரை பதவி நீக்கம் செய்துவிட்டு ராஜபக்சவின் திருடர்கள் பிரதமராக மஹிந்தவை அரியணையில் அமர்த்துவார்கள்.

மேற்குலகத்தின் செல்லப்பிராணியாகவும் ராஜபக்சக்களின் நண்பராகவும் காணப்படும் ரணில் விக்ரமசிங்க ஒருபோதும் ராஜபக்சக்களைக் காட்டிக் கொடுக்க மாட்டார்.

அதேவேளை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உலர் உணவுப் பொதிகளை வழங்கி விட்டு கச்சதீவை மீட்பதற்கு இதுவே தருணம் எனக் கூறியிருப்பது தமிழகம் எமது தொப்புள் கொடி உறவா? என்ற கேள்வி எழுவதாக இதன்போது மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் காட்டமாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments