இலங்கையைச் சேர்ந்த ஐவர் இராமேஸ்வரத்தில் தஞ்சம்!!


இன்று திங்கட்கிழமை (2) அதிகாலை 2 மாத கைக்குழந்தையுடன் ஒரே  குடும்பத்தைச் சேர்ந்த  மேலும் 5 பேர் அகதிகளாக இராமேஸ்வரம் சென்றுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில்  தமிழர்கள் இந்திய - இலங்கை சர்வதேச கடல் எல்லையில் உள்ள தீவிர கண்காணிப்பையும் மீறி  படகுகளில் தனுஷ்கோடிக்கு அகதிகளாக செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (1)  நள்ளிரவு யாழ்ப்பாணம்  - நெடுந்தீவு கடற்கரையில் இருந்து ஒரு  படகில் புறப்பட்ட வவுனியா மாவட்டம் சிதம்பரபுரம் பகுதியில் வசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 தமிழர்கள் திங்கட்கிழமை அதிகாலை  2 மணி அளவில் இராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரையை சென்றடைந்துள்ளனர்.

இவ்வாறு சென்றவர்களில் இரண்டு மாத கைக்குழந்தையும் அடங்கும்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் விசாரணைக்குப் பின் இந்த 5 இலங்கைத் தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கபட்டைத்துள்ளார்கள்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் இன்று வரை 80 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் சென்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments