இலங்கையில் பூச்சாண்டி காட்டும் இந்திய உளவுத்துறை - மருத்துவர் முரளி வல்லிபுரநாதன்


தி ஹிந்து பத்திரிகையில் இந்திய உளவுத் துறையை ஆதாரம் காட்டி வெளியான செய்தியில் புலிகள் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு மே 18

முள்ளிவாய்க்கால்  தமிழர் இன அழிப்பு நினைவேந்தல் நாளில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை வாசிக்கும் போது முன்னர் யுத்த காலத்தில் இலங்கை வானொலி செய்திகளை கேட்டால் லங்காபுவத் செய்திகளை ஆதாரம் காட்டி பல பச்சைப் பொய்களையும் புளுகு மூட்டைகளையும் அவிழ்த்து விடுவது நினைவுக்கு வருகிறது. இலங்கையில் இந்தியா ஒவ்வொரு பாரிய அரசியல் நகர்வையும் மேற்கொள்ளும் போதும் இத்தகைய பூச்சாண்டிக் கதைகள் நேரடியாகவோ அல்லது  தி ஹிந்து போன்ற அவர்களின் முகவர் செய்தி நிறுவனங்களின் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. 

2019 ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னதாக இந்திய உளவு துறை இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தாக்குதல்கள் இடம் பெறலாம் என்று எச்சரித்ததாக செய்திகள் வெளிப்பட்டு இருந்தது. ஆனால் இந்தத் தாக்குதல்கள் இலங்கையில் குறிப்பிட்ட நபர்களை தேர்தலில் வெற்றி பெற அடிப்படைவாதிகளை பயன்படுத்தி செய்யப்பட்ட சதி என்று கத்தோலிக்க ஆண்டகையும் ஏனைய பலரும் இப்போது தெரிவித்து வருகிறார்கள். இதில் இருந்து இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பெயரை பயன்படுத்தி பூச்சாண்டி காட்டியதன் உள்நோக்கம் ஆட்சி மாற்றம் என்று தெரிய வருகிறது. அது போலவே தற்போது இலங்கையில் புதிய பிரதமர் இந்திய அனுசரணையுடன் பதவிக்கு வந்துள்ள போது அவரை பலப்படுத்தவும் தமிழ் தேசியவாத சக்திகளை அடக்கவும் தற்போதைய புலிப் பூச்சாண்டி திட்டமிட்ட முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

காலிமுகத்திடலிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் வலுப் பெற்றதை அடுத்து அமெரிக்க வல்லரசும் பிராந்திய வல்லரசான இந்தியாவும் தமது சொல்லுக்கு அடி பணியாத இடதுசாரி அரசாங்கம் ஓன்று இலங்கையில் உருவாகலாம் என்று அஞ்சினார்கள். அதை தடுப்பதற்கு சரியான முகவராக ரணில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சனாதிபதியை  பொறுத்தவரையில் ராஜபக்ஸர்கள் இறுதி வரை பாதுகாக்கப்பட வேண்டும். சஜித் அல்லது ஜேவிபி பதவிக்கு வந்தால் அவ்வாறான பாதுகாப்பு கிடைக்காது . மேலும் ரணில் மத்தியவங்கி முறி மோசடியில் இருந்து ராஜபக்சர்களினால் காப்பாற்றப்பட்டதால் அவர் நன்றிக்கடனாக ராஜபக்சர்களை இறுதிவரை ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து காப்பாற்றுவார் என்று உணர்ந்ததால் ரணில் பதவிக்கு கொண்டுவரப்பட்டு இருக்கிறார். இதன் மறு வடிவமாக இந்தியாவின் கட்டுப்பாட்டில்  இயங்கும் தமிழ் கட்சி தலைவர்களும் ஊடகங்களும் இலங்கை பொருளாதாரத்தின் மீட்பராக அதாவது தற்போதைய சூழலில் ரணிலை தவிர வேறு ஒருவராலும் இலங்கையை மீட்க முடியாது என்று கதை பரப்பி வருகிறார்கள். ஏற்கெனவே தொடர்ந்து பணம் அச்சிடுவது அதனால் ஏற்படும் பணவீக்கம் மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு தடுக்க முடியாது என்று ரணில் கைவிரித்துள்ள நிலையில் மாயமான் ரணில் அனைத்து பொருளாதாரக் கஷ்டங்களையும் நிவிர்த்தி செய்வார் என்று இந்திய கைப்பொம்மைகள் தெரிவித்து வருகின்றனர். இந்தியா மற்றும் மேற்குலக சக்திகளின் முகவராக ரணில் செயல்படும் நிலையில் இவருக்கு அதிகளவு கடன்களை வழங்கி தற்காலிகமாக இலங்கையின் பொருளாதாரம் உயர்ந்து விட்டது போல் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி மக்கள் எழுச்சியை தடுக்க இந்த சக்திகள் முயல்வார்கள். உண்மையில் இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்தவோ அல்லது இலங்கையை ஒரு தன்னிறைவு காணும் நாடாக மற்றும் திட்டமோ அல்லது நோக்கமோ கிஞ்சித்தும் ரணிலுக்கு இல்லை என்பதை 6 வது தடவையாக  பிரதமர் பதவி ஏற்கும் அவர் கடந்த 5 தடவைகளும் என்ன செய்தார் என்பதை வைத்து அறிந்து கொள்ள முடியும். தனது பதவிக் காலங்களில் தொடர்ச்சியாக நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்ததுடன்  ஊழலில் ஈடுபட்டதும் அல்லாமல்  எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் ஊழல் விசாரணைகளில் இருந்து பாதுகாத்து நாட்டின் கடன் சுமையையும் அதிகரித்து வந்து இருக்கிறார். இவர் மீண்டும் பதவி இறங்கியதும் மறுபடியும் வெளிநாட்டுக் கடன் சுமை பூதமாக மாற அடுத்த அரசாங்கம் சீனர்களிடமோ அல்லது அமெரிக்கா இந்தியா கூட்டணியிடமோ மண்டியிட்டு சரணடைந்து மேலும் கடன் கேட்கும் ஒரு நச்சுச் சுழல் தற்போது இலங்கையில் உருவாகியுள்ளது. 

இதேவேளை ரணில் மூலம் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்கும் என்று சில தமிழ் தலைவர்கள் தற்போது கூறுவது "எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்ற பட்டுக்கோட்டையாரின்  பாடலை நினைவு படுத்துகிறது. இவரது கடந்த 5 பிரதமர் பதவிக் காலங்களில் தமிழர்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டும் தமிழினம் தொடர்ந்து அழிவுகளையும் சந்தித்து வந்திருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலங்களில் இடம்பெற்ற தமிழருக்கு எதிரான   இனக்கலவரங்கள், தமிழ் பொதுமக்கள் மீது ஆயுதப்படையினரை ஏவி மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு இன்று வரை நீதியோ நட்டஈடோ வழங்குவதற்கு ரணில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.  இந்தப்  பன்னாட்டு சதிவலை மற்றும் பொருளாதாரப் பொறியை ஈழ தமிழ் தலைமைகள் உணர்ந்து செயல்படுவார்களா ? 

No comments