பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படாது விடின் இளைஞர்களின் வாழ்வு பறிக்கப்படும் ஆபத்து - அருட்தந்தை சத்திவேல்


21 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக உரையாடப்படுகின்ற போது பயங்கரவாத தடை சட்ட நீக்கம் தொடர்பான விடயமும் உள்ளடக்கப்பட வேண்டும். இல்லையேல் இளைஞர்களின் வாழ்வு பறிக்கப்படும் ஆபத்தே உள்ளது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அருட்தந்தை மா.சத்திவேல் இன்று புதன்கிழமை (26.05.2022) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 2009ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சுந்தரலிங்கம் கேதீஸ்வரன் 13 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று 25.05.2022 விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சித்திரவதையை தொடர்ந்து புரியாத மொழியில் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலமே 21 வயதே நிரம்பிய சுந்தரலிங்கத்தின் 13 வருடங்களை சிறையில் கழிக்க வைத்துள்ளது. இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டம் தமிழர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் எத்தகைய வாழ்வு கொடுமைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள் என்பதற்கு கேதீஸ்வரனின் வழக்கு தீர்ப்பு இன்னும் ஒரு உதாரணமாகும்.

இனவாத மற்றும் மத வாதமுகம் கொண்ட பயங்கரவாத தடைச்சட்டத்தால் கைது செய்யப்பட்டு பிணை இன்றி சிறையில் வாடும் இளைஞர்களின்  இளமை, குடும்ப வாழ்வு, எதிர்காலம், சமூகப் பொறுப்பு அனைத்தும்  பறிக்கப்பட்டு சிறையில் வாடுகின்றார்கள் என்பதைவிட உயிரோடு கொலை செய்யப்படுகிறார்கள் என்றே கூற வேண்டும்.

இத்தகைய சட்டத்தை உருவாக்கி கடந்த 43  ஆண்டு காலமாக பாதுகாத்து வரும் பேரினவாத ஆட்சியாளர்களே பயங்கரவாதிகள், ஜனநாயக கொலையாளிகள்.ஏனெனில் தமிழர்களின் ஜனநாயக ரீதியிலான அரசியல் போராட்டத்தை அளிக்கவே இச் சட்டத்தை அன்று கொண்டுவந்தனர்.

2019 ஆண்டு உயிர்ப்பு தின குண்டுத்தாக்குதல் கொலைக்கு காரணமானவர்கள் என மக்களால் அடையாளப்படுத்தப்பட்டவர்கள் சுதந்திரமாக சுகபோகம் அனுபவிக்க அப்பாவி முஸ்லிம்கள் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் வாடுகின்றனர். செல்வாக்கு உள்ளவர்கள் வெளியில் வந்துள்ளனர்.

அதுமட்டுமல்ல காலிமுகத்திடலில் தற்போது நடைபெற்றுவரும் ஜனநாயக ரீதியிலான இளைஞர்களின் போராட்டத்தை அழித்தொழிக்கவும் வன்முறையை கட்டவிழ்த்துவிடவும் மூல காரணமானவர்கள் இந்நாள் வரையில் கைது செய்யப்படாமல் உள்ளனர். 

இது தொடர்பில் விசாரணையை முன்னெக்க குறிப்பாக முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மகிந்தராஜபக்ச, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மஹிந்த கஹந்தகம  ஆகியோரின் கடவுச்சீட்டுகளில் நீதிமன்றத்தில் ஒப்ப டைக்க வேண்டும் என நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தப் போதும் இன்று வரையில் அதனை கையளிக்காது சட்டத்தை அவமதிக்கும் இவர்களுக்கு எதிராகவே பயங்கரவாதத் தடைச்சட்டம் பயன்படுத்தப்படல் வேண்டும். இது சாத்தியமா?

அரசியல் யாப்பின் 21 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக உரையாடப்படுகின்ற இக்  காலகட்டத்தில் பயங்கரவாத தடை சட்டம் திருத்த  நீக்கம் தொடர்பான விடயமும்  உள்ளடக்கப்பட வேண்டும். இல்லையேல் தற்போதைய அரசியல் பொருளாதார கொந்தளிப்பான சூழ்நிலையில் கேதீஸ்வரன் போன்ற இளைஞர்களின் வாழ்வு பறிக்கப்படும் ஆபத்தே உள்ளது.

No comments