58 சிறைக்கைதிகள் மாயம்: காலி முகத்திடல் வன்முறையில் இருந்ததாகத் தகவல்!


வட்டரெக்க சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட 58 சிறைக்கைதிகள் காணாமல்போயுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கைதிகளுக்கான புனர்வாழ்வு திட்டத்தின் ஒரு அங்கமாக இடம்பெறும் வெளிப்புற கட்டுமானப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த குறித்த கைதிகள், நேற்றைய தினம் மீண்டும் வட்டரக்க சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டனர்.

அதன்போது, குறித்த கைதிகள் பயணித்த பேருந்துகள் மீது, ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், அதனையடுத்து, 58 கைதிகள் காணாமல்போயுள்ளதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்த கைதிகள் தொடர்பான தகவல்களை தெரிந்திருப்பின், சிறைச்சாலை தலைமையகத்துக்கோ அல்லது அருகில் உள்ள காவல்நிலையத்துக்கோ தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் சிறைச்சாலை தலைமையகம் கோரியுள்ளது. 

காலிமுகத்திடலில் நேற்று இடம்பெற்ற அமைதியின்மை சம்பவத்தில் கைதிகள் சிலர் இருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அவர்கள் சிலர் பொதுமக்களால் பிடிக்கப்பட்ட நிலையில் குறித்த நபர்கள் தொடர்பான தகவல்களை சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றியிருந்தனர்.

இந்த விடயம் தொடர்பில் தெளிவுப்படுத்தி சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார ஊபுல்தெனியாவினால் இன்று ஊடக அறிக்கை ஒன்று விடுக்கப்பட்டது.

கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைக்கு அமைய வேலை நிவாரண முறைமைக்கு அமைய வட்டரெக்க சிறைச்சாலையின் கைதிகள் 180 பேர் கொள்ளுப்பிட்டிய, ராஜகிரிய மற்றும் பத்தரமுல்லை பிரதேசங்களுக்கு நிர்மாணப் பணிகளுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று பிற்பகல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டமையை அடுத்து குறித்த கைதிகளை மீள அழைத்து செல்லும் போது மாலபே பகுதியில் அவர்கள் பயணித்த பேருந்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது 123 பேரை பாதுகாக்க முடிந்த போதிலும் 58 பேர் காணாமல் போயுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments