கோத்தா கடற்படை காணி அளவீடு செவ்வாய்!



முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் உள்ள 670 ஏக்கர் காணி கோத்தபாய கடற்படை தளத்திற்காக சுவிகரிப்பதற்காக எதிர்வரும் செவ்வாய்கிழமை 10ம் திகதி நிலஅளவை திணைக்களத்தால் அளவீடு செய்யபட உள்ளதாக சமூக செயற்பாட்டாளர் சஜீவன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் கடற்படைத் தளம் அமைந்துள்ள நிலப்பகுதியினை புதிய சரத்தின் கீழ் அபகரிக்கும் பொது அறிவித்தல் நேற்று மாலை பிரதேச செயலாளரினால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பகுதியில் உள்ள பொதுமக்களிற்கு சொந்தமான 617 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள கடற்படை முகாம் பகுதியினை முழுமையாக அபகரிக்க இதுவரை காலமும் காணி சுவீகரிப்பின் 38 ஏ யின் கீழ் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறு பல முறை இடம்பெற்ற முயற்சிகள் அனைத்தும் மக்களின் போராட்டங்கள் காரணமாக தடுக்கப்பட்டிருந்த போதிலும் குறித்த பிரதேசத்தில் காணியினை சுவீகரிககும் முயற்சியினை மட்டும் கடற்படையினரும் பாதுகாப்பு அமைச்சும் தொடர்ந்த வண்ணமே உள்ளனர். இதன் பிரகாரம்  பாதுகாப்பு அமைச்சின் உத்தரவிற்கமைய பிரதேச செயலாளரினால் மீண்டும் சுவீகரித்தல் உத்தரவு பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.


No comments