முதலில் சாப்பாட்டு பிரச்சினை: சுமா புதிய விளக்கம்!

முழு நாடுமே  பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என ஜனாதிபதியுடனோ பிரதமருடனோ பேசி அதில் தீர்வு கிடைக்கும் என நம்ப முடியாது.

பிரதமர் ரணிலை எதிர்க்கவில்லை, மாறாக  ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய எமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லாது போராடிக்கொண்டுள்ளோம். நாம் அன்றும் இன்றும் ஜனநாயகத்தின் பக்கமே நிற்கின்றோம் என  தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முறையான மாற்றங்களை பாராளுமன்றத்தில் மேற்கொள்ளாவிட்டால் வெளியில் இருந்து மாற்றங்கள் உருவாகும். அது நாட்டில்  இரத்த வெள்ளத்தை உருவாக்கி பாரிய மக்கள் போராட்டத்தை நோக்கி பயணிக்கும் என்பதை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

கடந்த நல்லாட்சி அரசாங்க காலகட்டத்தில் ஜனநாயகத்தை காப்பாற்ற போராடினோம், அப்போது ரணில் ஜனநாயகத்தின் பக்கம் நின்றார், இப்போதும் அதே ஜனநாயகத்தை காப்பாற்றவே போராடுகின்றோம். ஆனால் இப்போது ரணில் ஜனநாயகத்திற்கு எதிரான பக்கம் நிற்கின்றார். ஆனால் நாம் அன்றும் இன்றும் ஜனநாயகத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம், 

21 ஆம் திருத்த விடயத்தில் இக்கட்டான  நிலையில் நாம் உள்ளோம், 21 ஆம் திருத்தத்தை கொண்டுவந்து அதில் நிறைவேற்று அதிகாரத்தை எவ்வளவு தான் குறைத்தாலும் அதனை ஆதரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்,  இதில் முன்னெடுக்கும் நல்ல விடயங்களை நாம் ஆதரிக்க வேண்டும். 

ஆனால் ஒட்டுமொத்தமாக இது கண்துடைப்பு நாடகமேயாகும். இதனையும் நாம் வெளிக்கொண்டுவர வேண்டும். 19 ஆம் திருத்தத்தில் இருந்த சில ஆரோக்கியமான விடயங்கள் கூட 21 ஆம் திருத்தத்தில் இல்லை. இது மக்களை ஏமாற்றும் செயற்பாடாகும்.  

அதேபோல்,  பொருளாதார நெருக்கடி காரணமாக வடக்கு கிழக்கு மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் முதலில் ஒட்டுமொத்த நாட்டினதும் பிரச்னைக்கு தீர்வு கண்டால் மட்டுமே எம்மால் வடக்கு கிழக்கின் பொருளாதார பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும். முழு நாடுமே  பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என ஜனாதிபதியுடனோ பிரதமருடனோ பேசி அதில் தீர்வு கிடைக்கும் என நம்ப முடியாது. ஆகவே முதலில் முழு நாட்டின் பொருளாதார பிரச்சினைக்குமான தீர்வு குறித்து தீர்மானம் எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

No comments