226 பேரினால் எதிர்காலமே நாசம் - சங்கக்கார: போராட்டங்கள் பலனளிக்காது - முரளிதரன்


நாட்டில் 226 பேரினால், 21 மில்லியன் மக்களின் எதிர்காலம் நாசமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டமானது, மிகவும் விழிப்பான, உறுதியான மற்றும் தைரியமான தலைமுறையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குமார் சங்கக்கார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் 226 பேரினால் 21 மில்லியன் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியதாகப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இத்தனை காலமும் எம்மால் தெரிவுசெய்யப்பட்ட அரசியல் தலைவர்களின் ஆட்சி கொள்கைகளினால் நாடு மிகவும் மோசமான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமது நாட்டு மக்களின் வாழ்க்கை மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளமை குறித்து அரசியல் தலைவர்கள் ஒருபோதும் வருத்தமடைய போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய மற்றும் காபந்து அரசாங்கம் பற்றிய விவாதங்கள் தற்போது இடம்பெற்று வருகின்ற நிலையில், நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு உடனடியாக குறுகிய கால அல்லது நீண்ட கால தீர்வு ஒன்று கட்டாயம் வேண்டும் என குமார் சங்கக்கார சுட்டிக்காட்டினார்.

எரிவாயு, மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதாக வாக்குறுதியளித்த அரசியல்வாதிகளை மக்கள் இனிமேலும் நம்பமாட்டார்கள் என குமார் சங்கக்கார தெரிவித்தார்.

நாட்டின் நெருக்கடிக்கு போராட்டங்களைச் செய்வதில் எவ்வித பயனுமில்லை என இலங்கை அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

போராட்டங்கள் இடம்பெறுவதனால், சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வரமாட்டார்கள். இதனால், வருமான இழப்பு ஏற்படும்.

எனவே, போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அதனைக் கைவிட்டால், சுற்றுலாப் பயணிகள் வருவதன்மூலம், நாட்டுக்கு வருமான அதிகரிப்பு ஏற்படும் என முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சி செய்தாலும் அல்லது எதிர்க்கட்சி ஆட்சி அமைத்தாலும், இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

அதேநேரம், சர்வதேச நாணய நிதியத்திடம் உதவிகளைப் பெற இருக்கின்ற சந்தர்ப்பத்தில், இலங்கையின் அரசியல் ஸ்திரத்தன்மை குறித்து சர்வதேச நாணய நிதியம் கவனம் செலுத்தும் என்றும் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

No comments