குழந்தையின் பெயருக்குப் பின்னால் தந்தை, தாய் பெயர்கள் இணைக்க வேண்டும் - இத்தாலி நீதிமன்றம் உத்தரவு


இத்தாலி நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயருக்குப் பின்னால் தந்தையின் பெயர் மற்றும் தாயின் பெயர்களை இணைக்க வேண்டும் என இத்தாலி அரசியலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

புதிதாகப் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் தானாகவே அவர்களின் தந்தையின் பெயரைப் பெயரிடும் பாரம்பரியத்தை இத்தாலி அரசியலமைப்பு நீதிமன்றம் இரத்து செய்தது.

இது தொடர்பான ஒரு வழக்கை அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டு விசாரித்து, அங்கு பிறக்கிற குழந்தைகளின் பெயருக்குப் பின்னால் இனி தந்தை, தாய் என இருவரது பெயரையும் சேர்க்குமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இதுவரை தந்தையின் பெயரை மட்டுமே தனது பெயருக்கு பின்னால் குழந்தைகள் கொண்டிருந்தது, பாகுபாடு மற்றும் அடையாளத்துக்கு கேடு விளைவிக்கும் என்று தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தாய், தந்தை இருவரும் ஒப்புக்கொண்டால், யாராவது ஒருவரது பெயரை தங்கள் பெயருக்கு பின்னால் குழந்தைகள் கொண்டிருக்கலாம் எனவும்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த அரசியல் சாசன கோர்ட்டு தீர்ப்புக்கு ஏற்ப, இத்தாலி நாடாளுமன்றம் இப்போது ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும். கோர்ட்டு தீர்ப்பை அரசு முழுமையாக ஆதரிப்பதாக, இத்தாலி குடும்ப மந்திரி எலினா பொனெட்டி ‘பேஸ்புக்’ பதிவில் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில், “இந்த முடிவுக்கு நாம் ஒரு பொருளைத்தர வேண்டும். இது அதிகபட்ச முக்கியத்துவம் வாய்ந்தது. அதை செய்து முடிக்க வேண்டும். குழந்தைகளை வளர்த்தெடுப்பதில் தந்தையும், தாயும் சம பங்கு எடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

No comments