ஐ.நா பொதுச்செயலாளர் வருகையின் போது கீவ் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்


ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றுள்ள நிலையில், அந்நகர் மீது ரஷ்யப் படைகள் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

நேற்று முன்தினம் ரஷ்ய அதிபர் புடினை மொஸ்கோவில் சந்தித்து பேசிய ஆன்டனியோ குட்டரெஸ் தற்போது உக்ரைன் வந்துள்ளார். தலைநகரையும் அதனை அண்டிய போரால் பாதிக்கப்பட்ட இடங்களை அவர் பார்வையிட்டார். 

தலைநகர் கீவில், அதிபர் செலன்ஸ்கி உடன் இணைந்து அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் போரை நிறுத்த தவறி விட்டதற்காக வருத்தம் தெரிவித்தார்.

அடுத்த ஒரு மணி நேரத்திற்குள், அங்கிருந்து 3.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கட்டிடங்கள் மீது ரஷ்ய படைகள்  ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின.  

கடந்த இரண்டு வாரங்களாக கீவ் நகர் மீது எவ்வித தாக்குதலும் நிகழ்த்தப்படாத நிலையில், ஐ.நா பொதுச்செயலாளர் வந்துள்ள சமயத்தில் ரஷ்ய படைகள் தாக்குதல் நிகழ்த்தியது ஐ.நா அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஐக்கிய நாடுகள் சபையை அவமதிக்கும் நோக்கில் ரஷ்யா இந்த தாக்குதலை நிகழ்த்தி உள்ளதாக அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

No comments