மே1:துன்பியல் நாளாம்!



இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், மே 1 தொழிலாளர் தினத்தை  துன்பியல் நாளாக பிரகடனம் செய்து அறிவித்துள்ளது.

அது விடுத்துள்ள ஊடக அறிக்கையில், உலகத் தொழிலாளர் நாளாம் மே:1 உலகில் வாழும் ஒட்டுமொத்த தொழிலாளர்களின் எழுச்சி நாளாகும். இந்நாளில் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எழுச்சியை வெளிப்படுத்தும் நாளே மேதினம்.

இலங்கையில் வாழுகின்ற அத்தனை தொழிலாளர்களும் தற்போது வாழ்வதற்கு வழியின்றி வாழ்க்கைக்காக போராடுகின்றனர். 

ஆசிரியர்களின் அடிப்படைச் சம்பளமாக இரண்டு லட்சம் தந்தாலும் இன்றைய நிலையில் வாழ முடியாது. அது போன்று அத்தனை உழைப்பாளர்களும் அடுத்த வேளை உணவுக்கு அலையும் நிலை இன்று உருவாகியிருக்கின்றது. இந்த நிலைக்கு இலங்கையில் உள்ள அத்தனை அரசியல் கட்சி உறுப்பினர்களும் காரணம் என்பதனை வலியுறுத்தி இளையோர் இன்று வீதியில் இறங்கியுள்ளனர்.


வருடந்தோறும் நாம் நடாத்தும் மேதின பேரணியாலோ, கூட்டங்களாலோ எதுவும் நடந்துவிடப் போவதில்லை. இது கடந்தகால வரலாறு.


இந்நாளை அரசியல்வாதிகளே தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றனர். இதுவே காலம் காலமாக நடைபெறுகின்றது.


இவ்வருடம் வரும் மேநாளை வாழ வழியில்லாத துக்கநாளாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பிரகடனப்படுத்துகின்றது.


ஒவ்வொரு அதிபரும், ஆசிரியரும் இந்நாளை துக்கநாளாக கருதி அவரவர் வீடுகளில் இருந்து பிரார்த்தனை செய்வோம் என கேட்டுக்கொள்கின்றோம். இவ்வருடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் எந்த மேதின ஊர்வலத்திலும் மேதின கூட்டங்களிலும் பங்குபற்றுவதில்லை என தீர்மானித்துள்ளது.நாடு சுபீட்சமடைந்து எமக்கு வாழ வழியேற்படுமாக இருந்தால் 2023 மே:1 ஐ உலக தொழிலாளர் நாளாக எழுச்சியுடன் கொண்டாடுவோம்.

No comments