கூலி கொடுத்து தந்தையைக் கொன்ற மகன்! இருவர் கைது!


மட்டக்களப்பு கரடியனாற்று பிரதேசத்தில் தனது தந்தையை கூலிக்கு ஆள்வைத்து வெட்டி கொலை செய்த  மகன் உட்பட இருவரை நேற்று  (17) கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த  ஞாயிற்றுக்கிழமை (13) கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரலக்குளம் குடாவெட்டி வயல் பகுதியில் வேளான்மை காவலுக்காக அமைக்கப்பட்ட கொட்டகை ஒன்றில் இருந்து வெட்டுகாயங்களுடன் விவசாயியான 54 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான பரசுராமன் ஆறுமுகம் என்பவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில் இவரின் 22 வயதுடைய மகன் மதுபாவனைக்கு அடிமையாகியுள்ளதனால் மதுபானம் வாங்க தந்தையிடம் பணம் கேட்பது மற்றும் தனது மாட்டுப்பட்டியிலுள்ள மாடுகளை திருடி விற்பது போன்ற நடவடிக்கையால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே  தொடர்ந்து தகராறு  ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், தனது நண்பனுக்கு 50 ஆயிரம் ரூபா பணம் கொடுத்து தந்தையை கொலை செய்துள்ளார்.

இந்த கொலைக்கு பயன்படுத்திய கத்தி, நாடா மற்றும் கல் என்பவற்றை மீட்டுள்ளதாகவும், இருவரையும் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments