இலங்கை:வீதி விளக்குகளிற்கு ஓய்வு!




மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் வகையில், மார்ச் 31 ஆம் திகதி வரை அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் உள்ள அனைத்து வீதி விளக்குகளையும் அணைக்குமாறு, அனைத்து உள்ளூராட்சி மன்ற தலைவர்களுக்கும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.


மின்சாரத்தை சேமிப்பதற்காக நடைமுறைப்படுத்தக்கூடிய மாற்று முறைகளை நடைமுறைப்படுத்துமாறும் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கு நிதி அமைச்சர் மேலும் பணிப்புரை விடுத்துள்ளார்.


மக்களின் அன்றாட நடவடிக்கைகளில் குறைந்தபட்ச பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான மாற்றுத் திட்டங்களை செயல்படுத்துமாறு  நிதியமைச்சர் கடிதம் மூலம் உத்தரவிட்டுள்ளார்.


நிலவும் வரட்சியின் காரணமாக நீர்மின் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதால் டீசல் மின் உற்பத்தி நிலையங்களை மின் உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டியுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, அதிக மின்சாரத்தை நுகரும் தேவையற்ற மின் உபகரணங்கள் மற்றும் விளக்குகளின் பயன்பாட்டை மட்டுப்படுத்துமாறும் மின்சாரப் பற்றாக்குறையை எதிர்த்துப் போராடுவதற்கு சாத்தியமான வழிகளில் பங்களிக்குமாறும்  அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


இன்று (07) வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.


மசகு எண்ணெயின் அசாதாரண விலையேற்றம் பொருளாதாரத்தை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளதுடன், எரிபொருள் தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்த பொது மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


ரிய ஒளியில் இயங்காத தெரு விளக்குகளையும் அணைக்கலாம் எனவும் நெருக்கடியைத் தடுக்க குடிமக்களும் தங்கள் பங்கைச் செய்ய வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


 நாட்டில் மழையின்மை மற்றும் வரண்ட காலநிலை காரணமாக, நீர் மின் நிலையங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


மின்சார நுகர்வைக் குறைக்க குடிமக்களால் ஏதேனும் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க முடிந்தால், அதன் மூலம் தற்போதைய மின்சாரம் மற்றும் எரிபொருள் நெருக்கடியைத் தீர்க்க அவர்கள் பங்களிப்பார்கள் என்றும் அவர் தனது அறிக்கையில் மேலும் கூறினார்.

No comments