தரகு வேலையில் வடமாகாண கல்வி அமைச்சு!தமிழ் பாடசாலை  மாணவர்களுக்கு இலங்கை இராணுவ முகாம்களில் சதுரங்க பயிற்சி வழங்க வடமாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள் அனுமதித்தமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

கடந்த இரு தசாப்தங்களாக இலங்கையின் பல பகுதிகளில் உள்ள தமிழ் மாணவர்களுக்கு நூற்றுக் கணக்கான இலவச சதுரங்க பயிற்சி பட்டறைகளை பாடசாலை மட்டத்திலும் பல்கலைக்கழக மட்டத்திலும் தமிழ் மருத்துவ தரப்பை சேர்ந்த சிலர் நடாத்திவருகின்றனர். இதை விட ஹாட்லி கல்லூரி பழைய மாணவர்களின் நிதி உதவியுடன் வறிய பாடசாலைகளுக்கு இலவச சதுரங்க உபகரணங்களும் வழங்கப்பட்டுவருகின்றது.

சர்வதேச சதுரங்க சம்மேளனத்தினால் இலங்கையில் நடத்தப்பட்ட முதலாவது பயிற்றுனர்களுக்கு உரிய பயிற்சி வகுப்புகளில் பங்கு கொண்ட ஒரே தமிழராகவும்,யாழ் பல்கலைக்கழக சதுரங்க அணியின் முதலாவது   கேப்டன் ஆகவும் குறித்த மருத்துவரே இருந்துள்ளார்.

இந்நிலையில் அண்மையில் 10 பாடசாலைகளை சேர்ந்த தமிழ் பாடசாலை மாணவர்களுக்கு  கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தை இடித்து கட்டப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தின் 512 படைத்தளத்தில் தமிழர் அல்லாதோர் பயிற்சி வழங்கியமை அம்பலமாகியுள்ளது.

இந்நிலையில் மாவீரர் துயிலுமில்லத்திலுள்ள முகாமில் சதுரங்க பயிற்சிக்கு மாணவர்களை பயிற்சிக்கு அனுப்பியதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும் அவரோ கல்விப்பணிப்பாளர் மீதும் பின்னர் விளையாட்டு திணைக்களம் மீதும் காரணம் சொல்லி தப்பித்துக்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.


No comments