ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழர் தாயக வாக்குகள் எதிரியின் எதிரிக்கே! பனங்காட்டான்


சிங்கள தேசத்துக்கான அத்தனை ஜனாதிபதித் தேர்தல்களிலும் தமிழர் தாயக மக்கள் தங்கள் வாக்குகளை ஒருவரின் வெற்றிக்கு இலக்காக ஒருபோதும் அளிக்கவில்லை. குறிப்பிட்ட ஒருவருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற இலக்கே எதிரணிக்கு வாக்குகளாகக் கிடைத்தது. இதனை விளக்கமாகச் சொல்வதானால், எதிரியின் எதிரிக்கு வாக்களிப்பது எதிரிக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டுமென்ற சூத்திரத்திலானது

ஜெனிவா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் காலங்களில் தீர்மானங்கள், அறிக்கைகள், பதில் அறிக்கைகள் என்று தடல்புடலாக விடயங்கள் நடந்தேற, அதையொட்டிய வேறு பல சமாசாரங்கள் திருவிழாக் காலம் போன்று இடம்பெறுவது வழக்கம். 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை ஜெனிவாவுடன் இப்போது நேரடியாக ஆரம்பித்துள்ளனர். இது இலங்கை அரசுக்கு மட்டுமன்றி தமிழ்த் தலைமைகளுக்கும் தலைவலி. 

சில வாரங்களுக்கு முன்னர் வடபுலம் சென்ற கோதபாயவின் நீதி அமைச்சர் அலி சப்றி, ஜெனிவா அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் இவர்கள் விடயத்தை ஒருவாறு சமாளித்து விடலாமென்று நினைத்து எடுத்த முயற்சி பாம்புப் புற்றுக்குள் கையை நுழைத்த கதையாகி விட்டது. 

இறந்தவர்களை மீட்டுத்தர முடியாது, மரணச் சான்றிதழும் ந~;ட ஈடும் தரலாமென்று சொல்லப்போக, அப்படியானால் எங்கள் பிள்ளைகளைக் கொன்று விட்டீர்களா என்று அன்னையர் எழுப்பிய கேள்விக்கு கோதா தரப்பில் பதில் இல்லை. பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோரில் 112 பேர் இதுவரை காலமாகி விட்டனர் என்ற விபரம் ஜெனிவாவுக்கு சமர்ப்பணம் ஆகியுள்ளது. 

தொல்பொருள் ஆய்வு என்ற பெயரில் தமிழ் மண் சூறையாடப்படுவதும், பட்டி தொட்டியெங்கும் குட்டிப் புத்தர்கள் மழைக்காளான் போல் முளைப்பதும் ஜெனிவாவுக்குப் பட்டியலிட்டுச் சென்றுள்ளது. 

இதனை எழுதிக் கொண்டிருக்கையில் தமிழ்த் தேசிய கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தின் முன்னாலும், ஜெயவர்த்தனபுர நாடாளுமன்ற வளவிலும் காணி அபகரிப்பைக் கண்டித்து கவனயீர்ப்புப் போராட்டம் நடத்துகின்றனர். 

இது ஜெனிவாக் காலம் என்பதால் ஏதோ ஒரு வகையில் இவை சர்வதேச கவனம் பெறுகின்றன. ஆனால், இதனை சிங்கள தேசத்தால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்பொழுது தமிழர் தரப்பில் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான செயற்பாடுகளை - அரசுக்கு எதிரான சதி என்று ஜனாதிபதி கோதாவின் ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

தமிழர் தரப்பால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஊடகப்பிரிவு மறுக்கவில்லை. தவறான தகவல்கள் முன்வைக்கப்படுவதாகவும் அது சொல்லவில்லை. இச்செயற்பாடுகளுக்கு தெரிந்தெடுக்கப்படும் காலமும் நேரமும், ஊடகங்களில் கிடைக்கும் முக்கியத்துவம் என்பவைகளையே இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. 

எண்பதுக்கும் அதிகமான வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகளை ஒன்றுகூட்டி மெய்நிகர் வழியாக அரசாங்கம் மேற்கொள்வதாக விளக்கும் முன்னேற்ற நடவடிக்கைகளை அமைச்சர் பீரிஸ் ஒருபுறத்தே மேற்கொண்டிருக்க, மறுபுறத்தே தமிழர் தரப்பு மேற்கொள்ளும் கவனயீர்ப்புகள் ஜெனிவாவில் சிங்களத் தேசத்துக்கு நெருக்குவாரத்தைத் தரலாமென அஞ்சுவதால் இதற்கு - அரசுக்கு எதிரான சதி என்று பெயர் சூட்டுகின்றனர். 

சிங்களதேச அரசியலில் எப்போதும் எதிரும் புதிருமாக, கீரியும் பாம்பும்போல் இயங்கிவரும் சிங்களக் கட்சிகளும் அதன் பிரமுகர்களும் ஜெனிவாக் காலத்தில் ஒன்றுபட்டுவிடுவர். 

ராணுவத்துக்கெதிரான போர்க்குற்றங்களை மூடி மறைக்கவே ஒரே குரலில் இந்தக் கைகோர்ப்பு. ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாச ஆகியோர் ஒருவரையொருவர் முகம் பார்த்துக் கதைக்காவிடினும் ஜெனிவாவின் போர்க்குற்ற விசாரணை என்ற விடயத்தில் - நாம் சிங்களவர் என்ற மனப்பான்மையில் ஒன்றுபட்டு எழும்புவதை முள்ளிவாய்க்காலிலிருந்து பார்க்க முடிகிறது. இதில் ஜே.வி.பி.யும் விதிவிலக்கல்ல. 

இறையாண்மை, உள்நாட்டு நீதிவிசாணை என்பவையே இதற்காக இவர்கள் முன்வைக்கும் ஒற்றைக் கோசம். அவசரமான அவசியமான வேளைகளில் - எங்கள் ராணுவத்தை நாங்கள் ஒருபோதும் காட்டிக் கொடுக்க மாட்டோம் - என்று முழக்கமிடுவார்கள். (தம்மை அடுத்த ஜனாதிபதி என்று கூறிக்கொள்ளும் சஜித் பிரேமதாசவும் இரு நாட்களுக்கு முன்னர் இதனையே அறிக்கையாக வெளியிட்டார்). குற்றக் கூண்டில் ஏறவேண்டிய ராஜபக்சக்களுக்கு இதுவே உச்சாடன மந்திரம். 

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறந்த போர்வீரர். தமது படையணியை நேர்த்தியாக வழிநடத்தியவர். இறுதிவரை களமாடியே சாவடைந்தவர். அவர் மீது தனக்கு தனி மரியாதை உண்டு என்று அடிக்கடி புகழ் பாடும் யுத்தகால ராணுவத்தளபதி சரத் பொன்சேக. ராணுவம் மீதான போர்க்குற்ற விசாரணை என்று வரும்போது தம்மை உண்மையான சிங்களவராகவும், ராணுவ அதிகாரியாகவும் எண்ணிக் கொண்டு குரல் கொடுக்க ஆரம்பிப்பார். 

முள்ளிவாய்க்காலின் பின்னர் ராஜபக்சக்களோடு ஏற்பட்ட பிணக்கினால் இவர் பிரிய நேர்ந்தது. தம்மை யுத்த நாயகன் என்று அவர்கள் பிரகடனப்படுத்தாததே இதற்கான அடிப்படை. பாதுகாப்புச் செயலாளராக இருந்து யுத்தத்தை முன்னெடுத்த கோதபாயவை நாயகராக்கியதால் நாயிலும் கேவலமாக அந்த ஆட்சியில் தூக்கி வீசப்பட்டவர் சரத் பொன்சேக. 

அதன்பின்னரே ரணிலின் ஐக்கிய தேசிய பக்கம் பாய்ந்து, 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவை எதிர்த்து போட்டியிட்டார். இதில் சரத் பொன்சேக தோல்வியடைந்த போதிலும் தமிழர் தாயகத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இவருக்கே கூடுதலான வாக்குகளாக 571,067 கிடைத்தது. மகிந்தவுக்கு 355,221 வாக்குகளே கிடைத்தன. 

எதற்காக தமிழர் தாயக வாக்குகள் அதிகமாக தமக்குக் கிடைத்தன என்பதை மறைத்து, ஜெனிவா அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள போர்க்குற்றத்திலிருந்து இலங்கையைக் காப்பாற்றுவதற்கு ஓர் ஆயுதமாக சரத் பொன்சேக இப்போது எடுத்திருப்பதை விநோதமாக இங்கு பதிவு செய்ய வேண்டியுள்ளது. 

2010ம் ஆண்டுத் தேர்தல் பரப்புரையின்போது, ராஜபக்சக்கள் மனித உரிமைகளை மீறியதாகவும், வெள்ளைக் கொடியுடன் சென்ற போராளித் தலைவர்களை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டதாகவும், இறுதி யுத்த காலத்தில் தாம் மருத்துவ சிகிச்சையில் இருந்ததால் அப்போது இடம்பெற்ற குற்றச் செயல்களுக்கு தாம் பொறுப்பல்ல என்றும் கூறிய சரத் பொன்சேக, இப்போது போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லையென்று புலம்புவது சிங்கள மரபின்பால்பட்டது போலும். 

தேர்தல் நடைபெற்ற வேளை தீராத மனக்காயத்துடன் உழன்று கொண்டிருந்த தமிழ் மக்கள் போர்க்குற்றவாளிகளான ராஜபக்சக்களுக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென்பதால்தான், எதிரணி வேட்பாளரான பொன்சேகவுக்கு வாக்களித்தனர். இதனால்தான் அதிகூடிய வாக்குகளை அவரால் பெற முடிந்தது. 

இதனைப் புரிந்து கொள்ள மறுக்கும் பொன்சேக விதண்டாவாதமாகக் கூறும் போர்க்குற்ற மறுப்பு எந்த வகையிலும் ஏற்க முடியாதது. இவரது வாக்குமூலம் முன்னுக்குப் பின் முரணானது. ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு தமிழ் மக்கள் அளித்த கூடுதலான வாக்கு, படையினர் இனஅழிப்புச் செய்யவில்லையென்பதை எடுத்துக்காட்டுவதாக இப்போது அவர் கூறுவது ஜெனிவாவை ஏமாற்றுவதற்கானது. 

இலங்கையின் சகல ஜனாதிபதித் தேர்தல்களும் - 1982 முதல் 2019வரை அனைத்துமே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழேயே இடம்பெற்றன. அதற்கூடாகவும் ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும் எந்த வேட்பாளரை தோற்கடிக்க வேண்டுமென தமிழர் தாயக மக்கள் நினைத்தார்களோ, அவர்களுக்கு எதிராகவே வாக்குகளை வழங்கினார்கள். அவ்வாறு வாக்களிக்கும்போது தமிழர் வாக்குகளைப் பெறுபவர் தம்மை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்று எண்ணியிருப்பார்களானால், அல்லது இப்போது அவ்வாறு எண்ணுவார்களானால் அது அவர்களின் முட்டாள்தனமான சிந்தனை. 

1979ல் பயங்கரவாத தடைச்சட்டத்தை தற்காலிகமாக அமலாக்கி (இது இன்றுவரை 42 ஆண்டுகளாகத் தொடர்கிறது) தமது மருமகன் முறையான திஸ்ஸ வீரதுங்க என்ற ஒரு ராணுவத்தளபதியை பயங்கரவாதத்தை 100 நாட்களில் முடிக்குமாறு உத்தரவிட்டு வடக்கே அனுப்பியவர் அப்போதைய ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தன. தமிழ் இளையோர் படுகொலைகள் அன்றிலிருந்துதான் ஆரம்பமாகின. 

1982ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது இலங்கையின் 25 மாவட்டங்களில் யாழ்ப்பாணத்தில் மட்டுமே அவர் தோல்வி கண்டார். அதுவும் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார். இங்கு குமார் பொன்னம்பலம் முதலாம் இடத்திலும், ஹெக்டர் கொப்பகடுவ இரண்டாம் இடத்துக்கும் வந்தனர். ஹெக்டருக்கு இடப்பட்ட தமிழர் வாக்குகள் அவருக்கோ அவரது கட்சியான சுதந்திரக் கட்சிக்கோ இடப்பட்டவையல்ல. ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கு புரியும் வகையில் அவருக்கு எதிராக இடப்பட்டவை. 

தொடர்ந்து வந்த அத்தனை தேர்தல்களிலும் தமிழர் தாயக வாக்களிப்பு இதே இலக்கில்தான் இடப்படுகிறது. இனப்படுகொலை புரிந்த மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென்பதற்காகவே 2015ல் மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிகூடிய தமிழர் வாக்குகள் கிடைத்தன. 

சிங்கள தேசத்துக்கான அத்தனை ஜனாதிபதித் தேர்தல்களிலும் தமிழர் தாயக மக்கள் தங்கள் வாக்குகளை ஒருவரின் வெற்றிக்கு இலக்காக ஒருபோதும் அளிக்கவில்லை. குறிப்பிட்ட ஒருவருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற இலக்கே எதிரணிக்கு வாக்குகளாகக் கிடைத்தது. இதனை விளக்கமாகச் சொல்வதானால், எதிரியின் எதிரிக்கு வாக்களிப்பது எதிரிக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டுமென்ற சூத்திரத்திலானது. 

சரத் பொன்சேகவோ மைத்திரிபால சிறிசேனவோ தமிழர் வாக்குகள் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் அளிக்கப்பட்டவையாக கற்பனை உலகில் சஞ்சரிப்பது தெரிகிறது. நேர்த்தியாகச் சொல்வதானால் இவர்களும் போர்க்குற்றவாளிகள்தான். ஆனால், போர்க்கால ஜனாதிபதி, வெளிவிவகார செயலாளர் ஆகியோரின் அணியிலிருந்து வெளியேறி, எதிரணியில் புகுந்துள்ளதால் இப்போதைக்கு தப்பியுள்ளனர். அவ்வளவுதான்!

No comments