உக்ரைன் நெருக்கடி: புதினைச் சந்திக்கச் சென்றார் மக்ரோன்


உக்ரைனில் முழுமையான போரைத் தவிர்ப்பதற்கு இணக்கப்பாடுகள் சாத்தியம் என்று நான் கருதுகிறேன் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்.

இன்று ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதினை மொஸ்கோவில் சந்தித்து பேச்சுக்கள் நடத்துவதற்கு முன்னர் அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தனது கருத்தை வெளியிடுகையில்:-

உக்ரைனில் முழு அளவிலான போரைத் தவிர்ப்பதற்கான இணக்கப்பாடுகள் சாத்தியம் என்று தான் கருதுவதாகவும், ரஷ்யா தனது சொந்த பாதுகாப்புக் கவலைகளை எழுப்புவது நியாயமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளைப் பாதுகாக்கவும் ரஷ்யாவை சமாதானப்படுத்தவும் புதிய சமநிலைக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

உக்ரைனின் இறையாண்மை விவாதத்திற்கு இல்லை என்று அவர் மீண்டும் கூறினார்.

ரஷ்யா உக்ரைனின் எல்லையில் படைகளை குவித்துள்ளது, ஆனால் படையெடுப்பதற்கான திட்டத்தை பல முறை மறுக்கிறது.

நேட்டோ பாதுகாப்புக் கூட்டமைப்பு உக்ரைன் உறுப்பினராவதை நிராகரிக்க வேண்டும், கிழக்கு ஐரோப்பாவில் அதன் இராணுவப் பிரசன்னத்தைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மொஸ்கோ முன்வைத்துள்ளது. ஆனால் மேற்கத்திய நாடுகள் இதை நிராகரித்துள்ளன.  அதற்கு பதிலாக அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது போன்ற பிற பகுதிகள் பற்றிய பேச்சுக்களை அது பரிந்துரைத்துள்ளது.

பேச்சுவார்த்தைகள் தொடங்கியவுடன், உக்ரைனில் நெருக்கடியைத் தீர்க்க மக்ரோன் மேற்கொண்ட முயற்சிகளுக்காக ரஷ்ய அதிபர் பாராட்டினார்.

பிரான்ஸ் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் சுழலும் தலைவர் பதவியை வகிக்கிறது. நாளை செவ்வாயன்று மக்ரோன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் தலைநகர் கீவ் செல்லவுள்ளார்.

No comments