மோதல்களின் பின்னாலுள்ள சதிகாரர் யார்?

தமிழக இழுவைப்படகு உரிமையாளர்களது அத்துமீறல்களிற்கு எதிரான போராட்டம் என்பது தமிழக மக்களிற்கெதிராக போராட்டமல்ல.எங்களிற்காக இரத்தம் சிந்திய தமிழக தொப்புள்கொடி உறவுகளதும் தற்போதைய முதலமைச்சர் அவர்களது திராவிட முன்னேற்ற கழகத்தினதும் தியாகங்கள் மறக்கமுடியாதவை.

தாயக மற்றும் தமிழக மீனவர்களிடையே மோதல்களை தூண்ட முயற்சிப்பவர்களது சதிகளை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.உடனடியாக இருதரப்பு மீனவர்களையும் உள்ளடக்கி அரசுக்கள் பேச்சுககளை முன்னெடுக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென அழைப்புவிடுத்துள்ளார்  வடக்கு மாகாண கடல் தொழிலாளர் இணையத்தின் தலைவர் சுப்பிரமணியம். 

அதேவேளை  தமிழக மீனவர்களின் கவலையில் உங்கள் அரசியலை திணிக்க வேண்டாம் ,அரசியல் நாடகம் ஆட வேண்டாம் எனவும் அவர் உள்ளுர் அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,இந்திய மீன்வர்களின் அத்துமீறல்கள் வடக்கு கடல் பரப்பில் அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த கோரி யாழ் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உயிர் ,உடமைகளை இழந்த மீனவர்கள் வேறு வழி தெரியாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் சிவில் சமூக அமைப்புகள் ,அரசியல் கட்சிகள் இணைந்துள்ளனர்.

மீனவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு என்று கூறுகிறார்களே தவிர,மீனவர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு, அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று கூறவில்லை.

இது மக்கள் போராட்டம். ஆகவே உங்கள் அரசியல் இலாபங்களை இங்கே தேடும் நோக்கில் வர வேண்டாம். மக்களோடு மக்களாக நில்லுங்கள்,பிரச்சனைக்கு என்ன தீர்வு என்று கூறுங்கள்.

இந்த அரசு ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.நாமும் இந்த நாட்டிலே தான் இருக்கின்றோம்.

நாமும் நாட்டின் பொருளாதாரத்தில் பங்குகொள்கின்றோம். எமக்கான பிரச்சினையை தீர்ப்பதற்கு இரண்டு நாட்டு அரசுகளும் முன்வர வேண்டும்.

மீன்பிடி அமைச்சர் தமிழராக இருப்பது எமது பலம்.ஆனால் அவர் பொறுமையாக இருக்காமல் சண்டித்தனமாக இருந்தால் எமது பிரச்சினையை தீர்க்க முடியாது.

மீன் பிடி அமைச்சர்,இலங்கை கடல் படை, அரசு ஆகியவை சேர்ந்து செயற்பட்டாலே எமது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

கோபங்களை விடுத்து மக்களோடு மக்களாக நில்லுங்கள்.இங்கு அரசியல் வேண்டாம்.வேறு நாட்டு நபர்களால் எம் உறவுகள் கடலில் கொல்லப்படுகின்றனர். இதை முதலில் தீர்த்து வையுங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments