தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2022 – யேர்மனி, வூப்பெற்றால்

தமிழினத்தின் தொன்மை மிகு கலைகளின் திறன்களை யேர்மனியிலே பதியமிட்டு வரும் தமிழ்க் கல்விக் கழகம், இந்த ஆண்டுக்கான கலைத்திறன்

போட்டியைக் கடந்த சில ஆண்டுகள் போன்று சிறப்பாக நடாத்தத் திட்டமிட்டிருந்தோம். வழமைபோன்று ஒரு அரங்கில் எல்லாவகையான போட்டிகளையும் ஒரே நாளில் நடாத்துவதற்கான பொறிமுறைகள் வகுக்கப்பட்டிருந்த வேளையில், கொரோனா பெருந்தொற்றின் வேகம் அதிகரித்த கரணியத்தினால் பெருந்தொகையானவர்களை ஒரு மண்டபத்துக்குள் அழைப்பதும் அதனால் ஏற்படும் ஆபத்துக்களைத் தவிர்க்கும் நோக்கிலும் போட்டிகள் இரண்டாகப் பிரித்து நடாத்தப்பட்டன. அந்த வகையில் விடுதலைப் பாடல், வாய்ப்பாட்டு ஆகிய இரு போட்டிகள் மாத்திரம் மூன்று அறைகளில் மத்தி மற்றும் வடமத்தி ஆகிய இரு மாநிலங்களுக்கும் 05.02.2022 சனிக்கிழமை வூப்பெற்றால் நகரில் நடாத்தியதோடு, ஒரு பொது அரங்கில் போட்டியாளர்களுக்கான மதிப்பளிப்புகளும் நடைபெற்றன.

9:00 மணிக்குப் போட்டியாளர்கள், நடுவர்களின் நிறைவான வருகையை அடுத்து மத்திய மற்றும் வடமத்திய மாநிலச் செயற்பாட்டாளர்கள், நடுவர்களோடு, தமிழ்க் கல்விக் கழகத்தின் நிதிப்பிரிவுப் பொறுப்பாளர் மற்றும் யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளராகியோர் இணைந்து மங்கல விளக்கேற்றியதைத் தொடர்ந்து அகவணக்கத்தோடு போட்டிகள் தொடங்கி நடைபெற்றன. ஐந்துவகையான போட்டிகளில் 80க்கு மேற்பட்ட போட்டியாளர்கள் போட்டியிட்டதோடு, ஒவ்வொரு போட்டி நிறைவிலும் பங்கேற்பிற்கான மதிப்பளிப்பு வழங்கப்பட்டதோடு, வெற்றியாளர்களுக்கு வெற்றிப்பட்டி அணிவிக்கப்பட்டு, வெற்றிக் கிண்ணமும் வழங்கப்பட்டது.

பெருந்தொற்றுச் சூழலிலும் போட்டிகளில் இளைய பெற்றோர் தமது பிள்ளைகளோடு வருகை தந்திருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தமையானது கலைத்திறன் போட்டி மீதான அவர்களது ஆர்வத்தைக்காட்டி நின்றது. பாடற்போட்டிகள் நிறைவுற்றபோதும், ஏனைய கலைகளுக்கான குழுநிலைப் போட்டிகள் இவ்விரு மாநிலங்களுக்கும் 19.03.2022 நடாத்தப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments