ஆட்சி மாற்றம் தேவை:சந்திரிகா-போராட்டத்தில் சுமா!



பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தி மேற்கொள்ளப்படும் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நாளை கொழும்பிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி நாளை முற்பகல் 11 மணிக்கு கொழும்பு, கோட்டை புகையிரத்திற்கு நிலையத்துக்கு முன்பாக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரனின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பங்கேற்கவுள்ளனர்.

1979 ஆம் ஆண்டு ஆறு மாதங்களுக்கு ஒரு தற்காலிக விதிகள் சட்டமாக கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயற்பாட்டில் உள்ளது.

அன்றைய அரசாங்கத்திற்கு எதிரான கருத்து வேறுபாடுகளை நசுக்க கொண்டுவரப்பட்ட இச்சட்டம் இன்றும் தொடர்கிறது என கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த வாரம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்துவதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பித்திருந்தார்.

இதனிடையே  இலங்கையின் இன்றைய நிலைமை மிகவும் மோசமான கட்டத்தில் உள்ளது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.

மக்கள் அனைவரும் பொறுமை இழந்துள்ளனர் எனவும், நாட்டில் அடுத்து என்ன நடக்கும் என்று தன்னால் கூற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய ஆட்சியால் நாடு சீரழிந்துள்ளது என்றும் நாடு மீண்டு எழ முடியாத நிலையில் நாட்டின் பொருளாதாரம் அதாள பாதாளத்தில் சென்றுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

ஆட்சி மாற்றமே தற்போதைய உடனடித் தேவை என குறிப்பிட்ட சந்திரிகா குமாரதுங்க, ஜனநாயகத்தை நேசிக்கும் பிரதிநிதிகள் ஓரணியில் திரள வேண்டும் என்றும் அழைப்பு அழைப்புவிடுத்துள்ளார்.

அவ்வாறு இணையாவிட்டால் உலக வரைபடத்தில் இலங்கை இல்லாமல் போகும் நிலைமைதான் ஏற்படும் என்றும் சந்திரிகா குமாரதுங்க எச்சரித்தார்.

No comments