வைத்தியர் சிவரூபனுடன் கைதானோர் விடுதலை!தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்க முயற்சித்ததாகவம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை கொலை செய்ய சதி செய்ததான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர் சிவரூபனுடன் கைதான 5 முன்னாள் போராளிகளும் குற்றச்சாட்டுக்கள் ஏதுமின்றி இரண்டு வருடங்களின் பின்னர் இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கல்முனை - மருதமுனை ,கிளிநொச்சி,முல்லைதீவு மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜவர் முன்னாள் போராளிகள் வைத்தியர் சிவரூபனுடன் தொடர்புட்டவர்களென தெரிவித்து கைதாகியிருந்தனர்.

ஏற்கனவே பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கிளிநொச்சி - பளை வைத்தியசாலையின் வைத்தியர் சின்னையா சிவரூபன் கடந்த கடந்த 2019ம் ஆண்டின் பிற்பகுதியில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இராணுவத்தினால் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே வைத்தியர் சின்னையா சிவரூபன் கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்;.

வைத்தியர் சின்னையா சிவரூபனிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கிளிநொச்சி - பளை பகுதியிலிருந்து பெருமளவு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருந்ததாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஏ.கே - 47 துப்பாக்கியொன்றும், அந்த துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் இரண்டு மெகஸின்களும், 120 துப்பாக்கி தோட்டாக்களும், 11 கைக்குண்டுகளும், 10 கிலோகிராம் எடையுடைய எஃப்.ஈ 10 ரக வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இலங்கை காவல்துறையின் அடிப்படையில் பிபிசி உள்ளிட்டவை செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில் சுமார் இரண்டுவருடங்களின் பின்னர் குற்றச்சாட்டுக்கள் ஏதுமின்றி வழக்கு கூட தாக்கல் செய்யப்படாத நிலையில் 5 முன்னாள் போராளிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  


No comments