சுமந்திரனுக்கும் நம்பிக்கை இல்லையாம்!

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இன்றைய கொள்கை விளக்கப் பிரகடன உரை மிகவும் மட்டரகமான பேச்சு. அதைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது அவர் இலங்கையைப் பற்றித்தான் பேசுகின்றாரா அல்லது வேறு ஏதேனும் நாட்டைப் பற்றிப் பேசுகின்றாரா என்ற சந்தேகம் எங்களுக்குள் எழுந்தது. ஒரு பிரச்சினையும் இல்லாத - சுபீட்சமாக வீறுநடை போடுகின்ற ஒரு நாட்டைப் பற்றியே அவர் பேசுவது போல் இருந்தது." - இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, ''ஜனாதிபதியின் பேச்சில் தமிழரின் தேசியப் பிரச்சினை குறித்து ஒரு வார்த்தைதன்னும் இல்லை. அவர் சொன்னதெல்லாம் வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்காலிகமாகவேனும் தங்கள் கொள்கைகளை ஒரு பக்கம் வைத்து விட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அரசுடன் கைகோர்க்க வேண்டும் என்பதுதான்.

ஏன் கொள்கைகளை ஒரு பக்கத்தில் வைக்க வேண்டும்? இது எங்கள் கொள்கை இல்லை. மக்களின் கொள்கை. அதற்கான ஆணையைக் கொடுத்தவர்கள் மக்கள்தான். அது அவர்களின் கொள்கை. நாங்கள் மக்கள் பிரதிநிதிகளாக வந்ததே இந்தக் கொள்கையின் அடிப்படையில்தான்.

ஆகவே, மக்களின் தேவையைப் பூர்த்தி செய்வது ஒன்று, கொள்கை வேறொன்று என்று இல்லை. மக்களின் கொள்கையைத்தான் பூர்த்தி செய்யவேண்டும்.

அந்தக் கொள்கைகளை நாம் ஒரு பக்கத்தில் வைக்க வேண்டிய தேவை ஏதும் இல்லை. அந்த விடயம் கூட ஜனாதிபதிக்குப் புரிந்த மாதிரித் தெரியவில்லை" - என்றார் சுமந்திரன் எம்.பி.

No comments