வெளியே செல்கிறது சுதந்திரக்கட்சி:உள்ளே வர அமைச்சு கதிரை!
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எவ்வேளையிலும் அரசாங்கத்திலிருந்து வெளியேறலாம் என்பதால் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்றன அமைச்சரவை மாற்றம் தாமதமாகியுள்ளது.
பல அமைச்சர்களின் பதவிகளில் மாற்றங்கள் நிகழப்போகின்றன என தெரிவித்துள்ள அரசியல் வட்டாரங்கள் பெருந்தெருக்கள் - விவசாய- மீன்பிடித்துறை- போன்ற துறைகளிற்கு பொறுப்பான அமைச்சர்கள் மாற்றப்படலாம் ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எவ்வேளையிலும் அரசாங்கத்திலிருந்து வெளியேறலாம் என்பதால் அமைச்சரவை மாற்றம் தாமதமாகின்றது என தெரிவித்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபாலசிறிசேன ஏற்கனவே தனது தலைமையிலான புதிய கூட்டணி குறித்து கோடிட்டுக்காட்டியுள்ளதுடன் தனது கூட்டணியுடன் இணையுமாறு ஏனைய கட்சிகளிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் சமீபநாட்களில் அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சித்து வருகின்றனர் இதன் காரணமாக பிளவு தீவிரமடைந்துள்ளதுடன் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை விமர்சித்து வருகின்றனர்.
எனினும் சுதந்திரக்கட்சியை விமர்சிப்பதை தவிர்க்குமாறு அரசாங்கத்தின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு சிரேஸ்ட உறுப்பினர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவிற்குள் பிளவு எற்பட்டுள்ளதை சுதந்திரக்கட்சி வெளிப்படுத்தியுள்ள அதேவேளை சுதந்திரக்கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திலிருந்து வெளியேற மாட்டார்கள் என தெரியவருகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்திலிருந்து விலகிய பின்னர் சிலர் எதிரணி ஆசனங்களில் அமரவுள்ள அதேவேளை சிலர் அரசாங்கத்தின் பக்கம் செல்லவுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது அவர்கள் அரசாங்கத்துடன் இணைவது குறித்து விருப்பத்தை வெளியிட்டுள்ளனர் ஆனால் அரசாங்கத்தில் இணைந்து அதற்கு ஆதரவளிப்பதற்கு அவர்கள் பிரதி அமைச்சர் இராஜாங்க அமைச்சர் பதவிகளை கோருகின்றனர்.
Post a Comment