இலங்கையின் மாகாண சபையும் இந்தியாவின் 13வது திருத்தமும்! பனங்காட்டான்


இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிதாமகர்களான ஜே.ஆரும், ராஜீவும் இன்று உயிருடனில்லை. ஒப்பந்தத்தை முழுமையாக எதிர்த்த பிரேமதாசவும் அத்துலத்முதலியும்கூட உயிருடனில்லை. ஒப்பந்தம் பிரசவித்த மாகாண சபை கோதபாயவின் புதிய அரசியலமைப்பில் அகற்றப்படப் போகிறது. இனியும் இந்தியாவை நம்பி இலங்கை அரசைப் பகைப்பதா? - இப்படி சம்பந்தன் நினைக்கிறாரோ!

சில நாட்களுக்கு முன்னர் எனது நீண்ட நாள் நண்பர் ஒருவரிடமிருந்து மின்னஞ்சலொன்று வந்தது. 1970களிலிருந்து தமிழர் அரசியலை நன்கு அவதானித்து வருபவர் அவர். 

நான்கு விடயங்களை உள்ளடக்கிய இந்த மின்னஞ்சலில் இந்தியா கூட்டமைப்பினரை வருமாறு விடுத்த அழைப்பு, கூட்டமைப்பினர் அதனை அலட்சியம் செய்திருப்பது என்பவற்றை புட்டுக்காட்டியது. மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்ட விபரம் பின்வருமாறு இருந்தது:

'புதுடில்லிக்கு வர தயாராக இருக்குமாறு ஏற்கனவே தூதரகம் அறிவித்தது, 7-8ல் சந்திப்பு என்று தூதரகம் அறிவித்ததும் அதனை சுமந்திரனூடாக பங்காளிக் கட்சிகளுக்கு தெரிவித்தது, சந்தர்ப்பத்தை தவற விட முடியாது - நான் இல்லாமலே டில்லி போங்கள் என்கிறார் மாவை, மறுநாள் சந்திப்புக்கு வேறு திகதி தருமாறு சம்பந்தன் தூதரகத்தைக் கேட்டது, இதற்கான காரணம் - மாவையின் மகனின் திருமணம் - பாஸ்போர்ட் காலாவதியானது - நாடாளுமன்றத்தில் பட்ஜெட் வாக்கெடுப்பு. பசில் ராஜபக்ச பிரயத்தனம் செய்தும் சந்திக்காத மோடி, இவர்களைச் சந்திக்க அழைக்கிறார். ஆனால் இவர்கள் தவிர்க்கின்றனர். சம்பந்தனை யாராவது மிரட்டினரா?" 

இதுதான் மின்னஞ்சலில் உள்ளடக்கம். இதன் உண்மைத்துவம், காரணங்களைக் கண்டறிவதற்கு  முன்னர், கூட்டமைப்பினர் எதற்காக இந்தியப் பிரதமரைச் சந்திக்க விரும்பினர், அதனால் தமிழருக்கு ஏதாவது அரசியல் ஆதாயம் கிடைக்குமென எதிர்பார்க்கின்றனரா என்பவைகளையும், 1987ம் ஆண்டுக்குப் பின்னரான சில அரசியல் அசைவுகளையும் நோக்குவது அவசியம். 

ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சியில் தேசியப் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த லலித் அத்துலத்முதலி வடமராட்சி ஒப்பறேசன் என்ற பெயரில் பாரிய தமிழின அழிப்பை 1987ன் நடுப்பகுதியில் ஆரம்பித்தார். இதற்கு முன்னராக இஸ்ரேலின் ஆதரவுடன் 6,000மாக இருந்த இலங்கை ராணுவ எண்ணிக்கையை 24,000 ஆக்கினார். யாழ்ப்பாணக் குடாவில் மக்களை பட்டினி போடும் நோக்கில் உணவு விநியோகத்தைத் தடுத்தார். 

இலங்கையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக் காத்திருந்த இந்தியா இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, படகுகள் மூலம் யாழ்ப்பாணத்துக்கு உணவுப் பொருட்களை அனுப்பியது. ஆனால் இலங்கைக் கடற்படை அவைகளை இடைமறித்து திருப்பி அனுப்பியது. 

இதன் அடுத்த கட்டமாக, இந்தியா விமானங்கள் வழியாக யாழ்ப்பாணத்தில் உணவுப் பொட்டலங்களை வீசி, ஜெயவர்த்தன அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை தனது படைகளால் நசுக்க முடியாத நிலையிலிருந்த ஜே.ஆர். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இந்தியாவையும் தமிழரையும் மோத வைக்கும் நோக்குடன் இந்தியாவுடன் ஒப்பந்தத்துக்கு உடன்பட்டார். 1987 யூலை 29ல் ஜே.ஆரும் ராஜீவ் காந்தியும் ஒருதலைப்பட்சமாக செய்து கொண்ட இந்த ஒப்பந்தம் ஆயிரமாயிரம் இந்தியப் படைகளை தமிழர் தாயகத்தில் குவிக்க வழி வகுத்தது. 

இவையனைத்தும் இடம்பெறும்போது, தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளாக ஜே.ஆருடன் வட்டமேசை மாநாடுகள் நடத்திக் கொண்டிருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மௌனமாகவிருந்தது. இரு நாட்டுத் தலைவர்களும் செய்து கொண்ட ஒப்பந்தமே இலங்கை அரசியல் யாப்பின் பதின்மூன்றாவது திருத்தம். இதுவே, தமிழர் தாயகமான வடக்கையும் கிழக்கையும் தற்காலிகமாக இணைக்கும் ஒரு மாகாண சபை முறைமையை உருவாக்க ஏதுவாகியது. 

மாகாண சபைகளுக்கு அதிகாரப்பரவல் வழங்கப்பட வேண்டுமென்பது பதின்மூன்றாவது திருத்தத்தின் முக்கிய அம்சம். 1987 நவம்பர் 14ம் திகதி பதின்மூன்றாவது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தத் திருத்தத்தின் பிரகாரம் தமிழர் தாயகத்துக்கு மட்டுமன்றி, இலங்கையின் மற்றைய ஏழு மாகாணங்களுக்கும் மாகாண சபை உருவாக்கப்பட்டது. 

அந்த ஏழு மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் 1988 ஏப்ரல் 24ம் திகதிக்கும், யூன் 2ம் திகதிக்குமிடையில் நடத்தப்பட்டதாயினும், எதற்காக பதின்மூன்றாவது திருத்தம் கொண்டு வரப்பட்டதோ அந்த வடக்கு கிழக்குக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. 

வடக்கையும் கிழக்கையும் ஒரே நிர்வாகக் கட்டமைப்பாக்க கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பொன்றை 1988 டிசம்பர் 31க்கு முன்னர் நடத்தப்பட வேண்டுமென ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தும், ஜே.ஆர். அதனை தம்மி~;டப்படி நடத்தாது தவிர்த்தார். இவ்விடயத்திலும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மௌனமே சாதித்தது. 

1987 அக்டோபர் பத்தாம் திகதி இந்திய ஆக்கிரமிப்பு ராணுவம் தமிழர் தாயகத்தில் ஆரம்பித்த கொடூரத் தாக்குதலும், இதனால் ஆரம்பமான இந்தியப் படைகள் - விடுதலைப் புலிகள் மோதலும் ஜே.ஆர். விரும்பிய அல்லது எதிர்பார்த்த மாற்றங்களுக்குச் சாதகமாக அமைந்தது. 

இறுதியில், 1988 செப்டம்பர் 2 - 8ம் திகதிகளில் ஜே.ஆர். பிரகடனம் செய்த வடக்கு கிழக்கு தற்காலிக இணைப்பின் அடிப்படையில், வடகிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் 1988 நவம்பர் 19ல் இடம்பெற்றது. இந்தியாவின் துணைக்குழுவாக இயங்கிய ஈ.பி.ஆர்.எல்.எவ்வை இந்திய ராணுவம் இத்தேர்லில் வெற்றிபெற வைத்தது. இதன் பின்னரும் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி இரண்டையும் இணைக்கும் நடவடிக்கைகளை ஜே.ஆர். மேற்கொள்ளவில்லை. 

ஜே.ஆரின் பதவிக்காலம் முடிய, ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியானார். ஆரம்பத்திலிருந்தே இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்து வந்த இவர், இந்திய ஆக்கிரமிப்பு ராணுவத்தை 1990 மார்ச் முழுமையாக வெளியேற்ற, வடக்கு கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலமும் முடிவடைந்தது. ஈ.பி.ஆர்.எல்.எவ். முதலமைச்சராகவிருந்த வரதராஜப் பெருமாளும் இந்தியப் படைகளுடன் சேர்ந்து கப்பலேற, மாகாண சபையும் அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டது. 

ஆனால், சிங்களப் பகுதிகளில் மற்றைய ஏழு மாகாண சபைகளும் தொடர்ந்து இயங்கின. வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் சர்வஜன வாக்கெடுப்பு வெறும் அறிவிப்பாகவே காலவரையறையின்றி அமைந்தது. இது ஜே.வி.பி. யினருக்கு வாய்ப்பாகிப் போனது. வடக்கும் கிழக்கும் இணைந்த நிலப்பரப்பு இலங்கையின் மூன்றில் ஒன்றாக இருப்பதை சுட்டிக்காட்டிய ஜே.வி.பி., இரண்டையும் இணைக்கும் சர்வஜன வாக்கெடுப்பு சட்டத்துக்கு முரணானது என்று வாதிட்டது. 

அத்துடன் இதற்கு எதிராக மூன்று மனுக்களை 2006 யூலை 14ம் திகதி உச்சநீதிமன்றத்தில்  தாக்கல் செய்தது. அன்று உச்சநீதிமன்ற பிரதம நீதியரசராகவிருந்த - சிங்கள இனவாதியென அடையாளம் காணப்பட்ட சரத் என்.சில்வா, ஜே.ஆர். முன்னர் பிரகடனம் செய்த தற்காலிக இணைப்பு உத்தரவு செல்லுபடியற்றதென தீர்ப்பளித்து அதனை ரத்துச் செய்தார். அத்துடன் வடக்கு கிழக்கு இணைப்பும், சர்வஜன வாக்கெடுப்பும் முற்றுப்பெற்றது. 

இதனையிட்டு இந்தியா எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும் அப்படியே. அன்றிலிருந்து கொழும்பின் நேரடி நிர்வாகத்திலிருந்த வடமாகாண சபைக்கான தேர்தல் 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடத்தப்பட்டது. ஐந்தாண்டுகள் இயங்கிய இந்த மாகாண சபைக்கு காணி அதிகாரமும், காவற்துறை அதிகாரமும் கிடையாதென மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் கூறிவிட்டன. இந்த விடயத்தில்கூட இந்தியா ஒருபோதும் வாய் திறக்கவில்லை. 

ஒப்பந்தத்தின் பிரகாரம் பதின்மூன்றாவது திருத்தத்தின் கீழ் நிறுவப்பட்ட மாகாண சபைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தவும் இல்லை. இதனை கேட்கப்போக, நேரடியாக இது கிடையாது என்று இலங்கை சொல்லுமானால், அடுத்து என்ன செய்வது என்று தெரியாத கையறு நிலையில் இந்தியா இருப்பது தெரிகிறது. 

இதற்கிடையில், கிடைத்த அதிகாரங்களை பயன்படுத்த முடியாதிருந்த தமிழரசுக் கட்சியை தலைமையாகக் கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர், தாங்களே அழைத்து வந்து கதிரையில் ஏற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கெதிராக தாங்களே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து பதவியிறக்க எடுத்த முயற்சியால் வடமாகாண சபை அல்லோலகல்லோலப்பட்டது. 

2018ம் ஆண்டில் ஒருவாறு முழுமையாகப் பதவிக்காலத்தை முடித்த மாகாண சபைக்கு, அதற்குப்பின்னர் இன்னமும் தேர்தல் நடைபெறவில்லை. இப்பொழுதும் ஆளுனர் ஆட்சியே நடைபெறுகிறது. 

தமிழர் தாயகத்தில் அரசியல் - பண்பாட்டு மையமாகத் திகழும் வடமாகாண சபைக்கு முதன்முறையாக தமிழ் தெரியாத சிங்களவர் ஒருவர் இந்த ஆண்டு நடுப்பகுதியில் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த மாதத்தில் கிழக்கு மாகாணசபைக்கும் சிங்களவர் ஒருவரே பிரதம செயலாளராக நியமனமாகியுள்ளார். வடக்கு மாகாண சபையின் ஆளுனராக தமிழ் தெரியாத தமிழரும், கிழக்கு மாகாண சபையின் ஆளுனராக தமிழ் தெரியாத சிங்களவரும் பதின்மூன்றாவது திருத்தத்தின் கீழ் பணியாற்றுவது விண்ணாணம்தான். 

தமிழருக்கான அதிகாரப் பகிர்வுகளுக்கென 1987ல் செய்யப்பட்ட இரு நாட்டு ஒப்பந்தத்தின் கீழ் ஐந்து ஆண்டுகள் மட்டுமே வடக்கில் தனியான மாகாண சபை இயங்கியுள்ளதென்றால், இந்தியாவால் எதனை இலங்கையிடமிருந்து பெற்றுத்தர முடியும்? முழுமையான அதிகாரங்களுடன் மாகாண சபை நிர்வாகத்தை உருவாக்குவதே இந்தியாவின் இலட்சியமென்று எவ்வளவு காலத்துக்கு கூறிக்கொண்டிருக்க முடியும்?

இனி இப்பத்தியின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட நண்பர் எழுப்பிய கேள்வியான - சம்பந்தனை யாராவது மிரட்டினரா? - என்பதற்கு பதில் காண முனைவது பொருத்தம். 

நல்லாட்சிக் காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவை பகைத்துவிடக்கூடாது என்பதற்காக இந்தியப் பிரதமரை சந்திக்க முனையாத, ஒரு கடிதம்கூட இந்திய அரசுக்கு எழுதாத சம்பந்தன் - இப்போது ராஜபக்சக்களை பகைக்க விரும்பாது - அவர்கள் வழங்கிய இலவச பங்களாவை இழக்க விரும்பாது இந்திய பயணத்தை முடக்க விரும்புகிறாரா? அல்லது, அண்மையில அமெரிக்க பயணம் மேற்கொண்ட லெப்ரினன்ட் வழங்கிய ஆலோசனையா? இல்iலையென்றால் தமிழரசுத் தலைவர் மாவையின் மீது மிளகாய் அரைக்கும் முயற்சியா? 

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிதாமகர்களான ஜே.ஆரும், ராஜீவும் இன்றில்லை. ஒப்பந்தத்தை முழுமையாக எதிர்த்த பிரேமதாசவும் அத்துலத்முதலியும்கூட இன்றில்லை. 

ஏட்டுச் சுரைக்காயாகவிருக்கும் மாகாண ஆட்சிக்கு முடிவு கட்ட கோதபாய அரசு புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவது சம்பந்தனுக்கு நன்றாகவே தெரியும். இதற்குப் பிறகு இந்தியா போனாலென்ன, போகாவிட்டாலென்ன? மோடியைச் சந்தித்துத்தான் என்ன நடைபெறப் போகிறது? சொந்த வீட்டைப் பேண முடியவில்லை. இதற்கும் மேல்.....

சம்பந்தன் என்னத்தை எண்ணி காய்களை நகர்த்துகிறாரோ - அது அவருக்குத் தெரிந்தாலாவது போதும். 

No comments