பேக்கரி,உணவகங்கள் தொடர்ந்து மூடப்படுகின்றது!



எரிவாயு தட்டுப்பாடு காரணமாக  இலங்கை முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள சுமார் 12,000 ஹோட்டல்கள், அரச மற்றும் தனியார் உணவகங்கள் மற்றும் பேக் கரிகள் முற்றாக மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத்  தெரிவித்தார்.

அரசாங்க நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்ட உணவகங்களின் எண்ணிக்கை சுமார் 4,000 என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட் களின் விலையேற்றம் காரணமாக கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 5,000 முதல் 6,000 வரையிலான சிற்றுண்டிச்சாலைகள்( வடை, பட்டாணி, சமோசா)  மூடப்பட்டுள்ளன. மேலும் உணவகங்களைப் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

நாட்டில் சுமார் 7,000 பேக்கரிகள் இருப்பதாகவும், அவற் றில் சுமார் 3,500 பேக்கரிகள் எரிவாயு மற்றும் மூலப் பொருட்களின் பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ள தாகவும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நிவாரணம் வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் ஏனைய பேக்கரிகளும் மூடப்படலாம் என தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.

ஒரு பெரிய நகரத்தில் உள்ள ஹோட்டல் ஒரு நாளைக்குச் சராசரியாக ஐந்து கிலோ பால் மாவை  பயன்படுத்துகிறது, மேலும் பால் மா பற்றாக்குறையால் பால் தேநீர் விநியோகம் முற்றிலும் தடைப்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.

தற்போது நிலவும் பொருளாதாரச் சூழலாலும், பொருளாதாரச் சரிவு காரணமாகவும் வாடகையைக் கூட கட்ட முடி யாமல் பெரும் நகரங்களில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்கள் மூடப்பட்டு இருப்பது  தெரியவந்துள்ளது.

இதேவேளை, பேக்கரி பொருட்களுக்கு விதிக்கப் பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நுகர்வோரின் வாங்கும் திறனில் ஏற்பட்ட சரிவால் பல ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகளின் வருவாயில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், எரிபொருள் விலை உயர்வு ஹோட்டல் மற்றும் உணவக வருவாயில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனால், ஹோட்டல்கள், உணவகங்கள், மளிகைப் பொருட்களின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. மரக்கறிகள் அடங்கிய உணவுப் பொதி ஒன்றின் சராசரி விலை 180 ரூபாவாக உயர்ந்துள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, கடுமையான சுகாதார விதிமுறைகளுக்கு உட்பட்டு பாடசாலை சிற்றூண்டிகள்  செயற்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தங்களது வருமானம் குறைந்துள்ளதாகவும் உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments