சிலிண்டர் வெடித்து கூண்டோடு வீடு அழிவு! புத்தளம் - கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி, குரக்கான்சேனையில் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்ததில், வீடும், வீட்டுடன் இருந்த சிறிய வர்த்தக நிலையமொன்றும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. 

மூன்று பிள்ளைகளுடன் தனிமையில்  வாழ்ந்து வரும் தாய், நேற்று (26) அதிகாலையில் தனது பேரப்பிள்ளைக்கு தேநீர் தயாரிக்க தண்ணீரை கொதிக்க வைக்க காஸ் அடுப்பைப் பற்ற வைத்துள்ளார். 

 இதன்போது, காஸ் அடுப்பு திடீரென பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியதால், வீடும் தீப்பற்ற ஆரம்பித்துள்ளது. 

இதனையடுத்து, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தனது மூன்று பிள்ளைகளையும், தனது மருமகளையும், பேரப்பிள்ளையையும் வீட்டுக்கு வெளியே அழைத்து வந்த குறித்த தாய், வீடு முழுவதும் பரவிக்கொண்டிருந்த தீயை அணைப்பதற்கு அயலவர்களின் உதவியையும் நாடியுள்ளார்.

 எனினும் , கூரை தகரத்தினாலும், ஏனையவை பலகையினாலும் கொண்ட வீடு என்பதால் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. குறித்த வீடு முழுமையாக தீயில் எரிந்துள்ளது. வீட்டில் இருந்த இருவருக்கு சிறிய தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

 

No comments