சீனாவை நம்பமாட்டோம்!இந்தியாவைச் சீண்டுவதற்கு சீனா இலங்கையைப் பாவிக்கக்கூடாதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன தெரிவித்துள்ளார்.

"தமிழ் மக்கள் அல்லலுறும்போதும் நியாயத்துக்காகப் போராடியபோதும் உதவ முன்வராத சீனா இப்போது கரிசனை காட்டுவதுபோல் நடிப்பது பலத்த சந்தேகங்களை எழுப்புகின்றது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் நடந்த காலகட்டத்தில் நாங்கள் சீனாவுடன் பேசியபோது, "நாங்கள் நாடுகளுக்கிடையிலான உறவுகளை வைத்துக்கொள்வோமே தவிர, உள்நாட்டு விவகாரங்களில் தலையிட மாட்டோம்" என்று கூறினார்கள். அதுமாத்திரமல்லாமல், தமிழ் மக்கள் யுத்த குற்றங்களுக்கும் இனப் படுகொலைக்கும் எதிராக உலக நாடுகளிடம் நீதி கேட்டு சர்வதேச மன்றங்களை அணுகியபோது, அங்கும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் அவர்களது கோரிக்கைகளுக்கு எதிராகவும் செயற்பட்டு இலங்கை அரசைக் காப்பாற்றி வந்தார்கள்.

இப்போது, தமிழ் மக்கள் மேல் பரிவுகொண்டவர்கள் போல் நடித்து, மீனவர்களுக்கு உதவி செய்கின்ற போர்வையில், ஒரு தொகுதி வலைகளையும் உலர் உணவுகளையும் கொடுத்த நாடகத்தையும் நாங்கள் அண்மையில் பார்த்தோம்.

வடக்கு மாகாணத்தில் அவர்களது பிரசன்னம் என்பது இந்தியாவைச் சீண்டுவதைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதை நாங்கள் புரிந்துகொண்டிருக்கிறோம் எனவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


No comments