பதவி தூசு என்கிறார் கம்மன்பில!

யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில்  மக்களுக்கு உண்மையை எடுத்து கூறியதற்காக தங்களது பதவிகளை ஜனாதிபதி பறிப்பாராக இருந்தால் அது தொடர்பில் தாம் கவலைப்படப்போவதில்லை என  அமைச்சர் கம்மன்பில,  பதிலளித்துள்ளார்.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக இருக்கும் வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோர் அமைச்சரவையில் யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக உயர்நீதிமன்றம் சென்றிருப்பது, அந்தத்தீர்மானத்தை விமர்சித்தமை ஆகியன தவறென, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ​ தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியின் இந்த கூற்று தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார். ​மேலும் தெரிவித்த அவர், யுகதனவி தொடர்பில் அமைச்சரவையில் பத்திரம் எதுவும் தாக்கல் செய்யப்படவோ, அமைச்சரவையில் கலந்துரையாடவோ இல்லை. இந்த விவகாரத்தில் நாட்டு மக்களுக்கு நாம் உண்மையை மாத்திரமே எடுத்து கூறினோம் என்றார்.

எனவே, நாம் எந்தத் தவறுகளையும் செய்யவில்லை. நாட்டை நேசிப்பது தவறென நாம் நினைக்கவில்லை. இதனால் அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகுவதற்கான அவசியம் எமக்குகிடையாது எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தவறுகள் செய்திருந்தாலேயே நாம் பதவிவிலக வேண்டும். நாம் தவறுகள் செய்ததாக எவரும் நினைப்பார்கள் எனின், ஜனாதிபதி எங்களது பதவிகளை பறிப்பாராக இருப்பாராயின் அவை தொடர்பில் எமக்குப் பிரச்சினை இல்லை என்றார்.

எமது அமைச்சுப் பதவிகள் பறிப்போகும் என்கிற ஆபத்தை அறிந்து கொண்டே நாம் யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் நாட்டுக்கும் நீதிமன்றத்துக்கும் உண்மையை கூறினோம். அமைச்சுப் பதவிகளை வகிப்பதைக்காட்டிலும் நாட்டைப் பாதுகாப்பதே எமக்கு முக்கியம் என்றார்.

No comments