முஸ்லீம்கள் தனித்திருப்பது ஆபத்து!



தமிழ் மக்களை ஒதுக்கி தனித்து பிரிந்திருந்தால் முஸ்லீம் மக்களது எதிர்காலம் கேள்விக்குள்ளாகுமென்பதை அவர்களது தலைவர்கள் புரிந்து கொள்ளவேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் தெற்கில் யார் ஆட்சியிலிருந்தாலும் தமிழ் முஸ்லீம் மக்களது சம உரிமையினை ஏற்று செயற்பட்டால் மட்டுமே கௌரவமான வாழ்வு அவர்களிற்கு கிட்டும் என்பதே உண்மையாகும்.

ஆனால் அவ்வாறாக இல்லாததொரு சூழலில் தமிழ் முஸ்லீம் தலைமைகளும் மக்களும் ஒருமித்து செயற்படுவதென்பது காலத்தின் தேவையாகுமெனவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே தாங்கள் ஏழு முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ள போதும் 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்த இந்திய அரசை கோரும் விடயத்தில் தமக்கு எதுவுமே தெரியாதென சில முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனரேயென்ற கேள்விக்கு பதிலளித்துள்ள க.சுரேஸ்பிறேமச்சந்திரன் இதனை அவர்கள் தாம் சார்ந்த கட்சிகளது தலைவர்களான ஹக்கீம் மற்றும் றிசாத் பதியுதீன் போன்றவர்களிடம் கேட்டறிந்து கொள்வது நல்லதென தெரிவித்தார்.

உண்மையில் அரசியல் சாசனத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வகையிலேயே 13வது திருத்தச்சட்டத்தை நாம் அமுல்படுத்த கோருகின்றோம்.மற்றைய படி அதுவொரு தற்காலிக தீர்வேயாகும்.இலங்கை -இந்திய ஒப்பந்தத்தில் ஒரு தரப்பாக கையெழுத்திட்ட வகையில் இந்தியாவிற்கு பொறுப்புள்ளதாலேயே நாம் அதனை வலியுறுத்துகின்றோம்.

ஆனாலும் தமிழ் முஸ்லீம் கட்சிகள் ஒன்றாக அமர்ந்து அரசியல் தீர்விற்கான தமது நிலைப்பாட்டை பேசி தெளிவுபடுத்த வேண்டும்.

சில கட்சிகள் சமஸ்டி பற்றி பிரஸ்தாபிக்கின்றன.ஆயினும் எத்தகைய சமஸ்டி என்பதை கூடி ஆராய்ந்து தீர்க்கமாக முடிவையெடுத்தால் சர்வதேச சமூகத்திடம் அதனை முன்னிறுத்தி பேச்சுக்களை நடத்த முடியும்.

தமிழ் - முஸ்லீம் கட்சிகள் கூட்டாக 13வது திருத்த சட்டத்தை அமுல்படுத்த இந்தியாவை கோருகின்ற கடிதம் நாளை 31ம் திகதி பூரணப்படுத்தப்படுமென நம்புகின்றேன்.இரா.சம்பந்தரும் ஹக்கீமும் பேசி முடிவுக்கு வருமிடத்து நாளையே அனைத்து கட்சி தலைவர்களும் ஒப்பமிட்ட கடிதம் தயாராகிவிடுமெனவும் சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.


No comments