பிரான்சில் நடந்த கட்டுக்கடங்காத சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டங்களைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் கைது


சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் அர்செனலுக்கு எதிரான ஆட்டத்தில் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் (PSG) வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிரான்ஸ் முழுவதும் கால்பந்து  இரசிகர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் 400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்படுவதற்கு வழிவகுத்துள்ளன. தலைநகர் பாரிஸில் பேருந்து, தொடருந்து சேவைகளைப் பாதித்த கலவரங்களைக் கட்டுப்படுத்த ஆயிரக்கணக்கான அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பட்டாசுகளும் தீப்பந்தங்களும் வெடிக்கப்பட்ட நிலையில், இந்த மோதலில் பல காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர். நகர மையத்தில் கூடியிருந்த கூட்டத்தைக் கலைக்க காவல்துறை கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியது.

கடந்த ஆண்டு PSG இதே கோப்பையை வென்றபோதும் இதேபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன  கொண்டாட்டங்கள் உயிரிழப்பில் முடிந்தன. இம்முறை, மிகவும் வலுவான உறுதியான ஒரு அமைப்புமுறையை நடைமுறையில் கொண்டு அதிகாரிகள் சிறப்பாகத் தயாராக இருந்தனர் என உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ் தெரிவித்தார்.

பெனால்டி ஷூட் அவுட்டில் பிரெஞ்சு அணி வெற்றி பெற்ற சிறிது நேரத்திலேயே, பாரிஸின் புகழ்பெற்ற சாம்ப்ஸ்-எலிசே வீதியில் ரசிகர்கள் குவிந்தனர்.

நகரிலிருந்து வெளியாகும் காணொளிக் காட்சிகளில், தீப்பந்தங்கள் ஏற்றப்படுவதும், சாலைகளில் மின்சார மிதிவண்டிகள் எரிக்கப்படுவதும், கொண்டாட்டக்காரர்கள் குறைந்தபட்சம் ஒரு கடையின் கண்ணாடியை உடைப்பதும் தெரிகின்றன.

முன்னதாக, PSG-யின் பார்க் டெஸ் பிரின்சஸ் மைதானத்தில் பிரம்மாண்டமான திரைகளில் இறுதிப் போட்டியைக் காண வந்த ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. 

கலவரத்தின் போது ஆறு வாகனங்கள், இரண்டு வணிக நிறுவனங்கள் மற்றும் ஒரு பேருந்து நிறுத்தம் சேதமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில் பாரிஸில் 280 பேர் உட்பட 416 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஏழு அதிகாரிகள் காயமடைந்ததாகவும், இந்தக் கலவரம் "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றும் நுனெஸ் கூறினார்.

தீவிர வலதுசாரித் தலைவர் மரைன் லெ பென் X தளத்தில் இவ்வாறு எழுதினார்: பிரான்சில் மட்டுமே ஒரு கால்பந்து கிளப்பின் வெற்றி கலவரங்களைத் தூண்டுகிறது.

வன்முறையை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற்காக, ஒரு வெற்றியின் மாலையில் அனைவரும் தங்களைத் தங்கள் வீடுகளுக்குள் பூட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை உணர்வது பிரான்சில் மட்டுமே என்று அவர் கூறினார்.

வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ள வெற்றி அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர். இதில், ஈபிள் கோபுரத்திற்கு அருகிலுள்ள ஷாம்ப்-டி-மார்ஸ் பகுதியைச் சுற்றிப் பார்ப்பதும், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் வழங்கும் வரவேற்பு நிகழ்ச்சியும் அடங்கும்.

No comments